பஞ்சாப் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர்.. ஏன் தெரியுமா?
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுக்காததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 14 -ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்
இந்த முறையும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க வேண்டும் என்று பாஜக துடியாய் இருக்கிறது.ஒருபக்கம் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலிதளமும் களத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சியும் பாஜக பக்கம் நிற்கிறது. இந்த கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் ஏற்கனவே பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர்
பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங் ஆவார். இவருக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை. இதனால் பாசி பத்தானா சட்டமன்றத் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவதாக மனோகர் சிங் கூறியுள்ளார்.

சரண்ஜித் சிங் சன்னி வேண்டாம் என்றார்
இது தொடர்பாக மனோகர் சிங் கூறுகையில், 'அவர் (சரண்ஜித் சிங் சன்னி) என்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் நான் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களையும் நான் சமாதானப்படுத்தினேன். நான் வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்' என்று கூறினார்.
Recommended Video

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
சரண்ஜித் சிங் சன்னிதான் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறிய மனோகர் சிங் , 'அமைச்சராகவும், முதல்வராகவும் சிறப்பாகப் பணியாற்றியதால் சன்னி முதல்வர் முகமாக அறிவிக்கப்படுவார். பஞ்சாபின் வெற்றிகரமான முதல்வர்களில் இவரும் ஒருவர். அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர், நான் அவரை ஆதரிக்கிறேன்'' என்று கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வரால் தனது சொந்த அண்ணனை கூட சமாதானப்படுத்த முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications