170 சீட் மாஸ்டர் பீஸ்.. சிறு கட்சிகளை விழுங்குதா உதயசூரியன்.. ஸ்டாலின் கணக்கால் ஆடிப்போகும் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் ஒதுக்கீடு, யாருக்கு தொகுதி போன்ற பேச்சுவார்த்தைகள் பரபரத்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட "உதயசூரியன்" சின்னத்தை வைத்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய பிளானை இறக்க திமுக தயாராகி வருவதாக தெரிகிறது.. அந்த பிளான் என்ன தெரியுமா???

தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணி கட்சிகளின் நெருக்கடி, தொகுதி பங்கீடு இழுபறி என பல சவால்கள் இருந்தாலும், குறைந்தது 170 தொகுதிகளில் தனது சொந்த சின்னத்தைக் களம் இறக்கி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக வியூகம் வகுத்துள்ளதாம்.. இதற்கும் பின்னணியில் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.. இதற்கு வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்..

DMK Stalin TN Election 2026 Rising Sun

சேவல் சின்னம்

அன்று திமுக என்ற கட்சி தொடங்கப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் பொதுத்தேர்தல் வந்தது.. ஆனால் அதில் திமுக பங்கேற்கவில்லை. பிறகு 1957-ல் அண்ணா தலைமையில் முதல்முறையாக தேர்தலை சந்தித்தது.

அந்த தேர்தலில் அறிஞர் அண்ணா சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திமுகவின் முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக சபை ஏறியது வரலாறு.

உதயசூரியன் - ஒரு ராஜதந்திர உத்தி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, உதயசூரியன் திமுகவின் நிரந்தர சின்னமானது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சின்னத்தில் போட்டியிடும் ஒரே இந்திய கட்சி திமுக மட்டும்தான் என்பது இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..

எப் போதுமே கூட்டணிக கட்சிகளுக்கு தனது சின்னத்தை வழங்குவது திமுகவின் ஒரு மிக முக்கியமான அரசியல் உத்தியாகும்... இதன் மூலம் வெற்றி பெறும் வேட்பாளர்கள் சட்டப்படி திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். இது ஆட்சி அமைப்பதற்கும், கொறடா உத்தரவின் மூலம் கட்சியை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் பெருமளவு உதவுகிறது என்பதையும் இங்கு நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்..

மேலும், இது ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை உயர்த்தி, தேசிய அளவில் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்டவே செய்கிறது.. அதனால்தான் உதயசூரியன் சின்னத்தை, திமுக எப்போதுமே பிரதானமாக கூட்டணிகளுக்கு வலியுறுத்தி வருகிறது.

2026 தேர்தல் களம் மற்றும் கூட்டணிக் குழப்பம்

இப்போது தேர்தல் வரப்போகிறது.. அதிமுக தனது கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகளை இணைத்து பலமாக தெரிகிறது. மறுபுறம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 40 தொகுதிகளையும், விசிக 10 தொகுதிகளையும் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதுதவிர தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இத்தனை கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், திமுக இந்த முறை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.. கடந்த தேர்தலில் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் கண்டது நினைவிருக்கலாம்..

உதயசூரியன் சின்னம்

எனவே அதே பாணியில் இம்முறையும் குறைந்தது 170 தொகுதிகளில் தனது சொந்த சின்னத்தைக் களம் இறக்கி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக வியூகம் வகுத்துள்ளது..

இதற்காக அதிமுக மற்றும் பாஜக பலவீனமாக உள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு, பட்டியலையும் தயார் செய்திருக்கிறதாம்.. சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைப்பதன் மூலம், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க திமுக முடிவு செய்துள்ளது.

சிறுகட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?

ஆனால், திமுகவின் இந்த 170 தொகுதி இலக்கு கூட்டணிக் கட்சிகளிடையே குறிப்பாக சிறுகட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக போன்ற கட்சிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தங்களது "தீப்பெட்டி" சின்னத்தில் போட்டியிட்டுத் தனித்துவத்தை நிரூபித்தன. எனவே, சட்டமன்றத் தேர்தலிலும் அங்கீகாரம் பெறத் தனிச் சின்னத்தையே அவை விரும்புகின்றன.

ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உறுதி என்பதால், வேறு வழியின்றி திமுகவின் நிபந்தனைக்கு சில கட்சிகள் அடிபணிய வாய்ப்புள்ளது.

170 சீட்

அதேநேரம், தங்களது கட்சியின் அடையாளமே காணாமல் போய்விடுமோ என்ற அச்சமும் சிறு கட்சிகளுக்கு இருக்கத்தான் செய்கின்றன.. எனவே அந்த கட்சிகளை சமாதானப்படுத்துவது திமுக தலைமைக்குச் சவாலான காரியமே.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, திமுகவின் இந்த 170 தொகுதி வியூகம் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அது அந்த சின்னத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை சோதிக்கும் முயற்சியாகும். அந்தவகையில், உதயசூரியன் சின்னத்திற்கு மாஸ் வெற்றியை தருமா அல்லது நெருக்கடியை தருமா என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+