திராவிட கட்சிகளுக்கு 65%? பாஜக எதிர்ப்புக்கு 20%? விஜய்க்கு எவ்வளவு?: 2026 களம் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு 65% வாக்குகள் கிடைக்கும் என்றும் மீதி இருக்கும் ஓட்டுக்களைத்தான் மற்ற கட்சிகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அரசியல் வட்டாரத்தில் விஜய் தொடர்ந்து தனது கட்சியை பற்றிய செய்தியை லைவ் ஆக வைத்திருக்கிறார். மாநாடு முடிந்தது 20 நாட்களைக் கடந்த பிறகும் விஜய்யின் செயல்பாடு பற்றிப் பல விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில மாதங்களாக அதிமுக பலமான எதிர்க்கட்சியாகச் செயல்படவே இல்லை என்று பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த வெற்றிடத்தை அண்ணாமலை நிரப்பிக் கொண்டிருந்தார். அவர் லண்டன் சென்ற பிறகு பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? எனக் கேட்கும் அளவுக்குக் கமலாலயம் சைலண்ட் மோடில் சிக்கிக் கொண்டுள்ளது.

tvk vijay

இந்நிலையில்தான், விஜய் அந்த இடத்தை சரியாக தன் பக்கம் இருக்கும்படி கவனமாகக் காய் நகர்த்த ஆரம்பித்திருந்தார். மாநாட்டுக்குப் பிறகு அதிகார பகிர்வு, ஆட்சியில் பங்கு என விசிகவுடன் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அது அமைதியான பிறகு அதிமுக கூட்டணி பற்றி பேச்சு எழ ஆரம்பித்தது. அதில் 20 நாட்கள் மைலேஜ் கிடைத்த பிறகு, இப்போது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தவெக.

இந்த அரசியல் யுக்தி பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், "எந்த ஒரு சிறிய கட்சியாக இருந்தால்கூட மக்களவைத் தேர்தல் போது ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதே சட்டசபைத் தேர்தல் என வரும்போது வேறு நிலைப்பாட்டையே எடுப்பார்கள். கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்தார். அதே சட்டசபை என வரும்போது அவர் கூட்டணி வைக்கவில்லை.

விஜய் இன்னும் தன் கட்சியின் பலத்தை நிரூபிக்கவில்லை. அவர் ஒரு சினிமா நட்சத்திரம். எனவே அவரிடம் தன்னைப் பற்றிய அதிக மதிப்பீடு இருப்பது சகஜம். சினிமாவுக்காக கூடும் கூட்டத்தை வைத்து அவர் மனதில் அப்படியான எண்ணம் ஏற்படுவது இயல்பு. அவர் முதல் தேர்தலைச் சந்திக்கும் வரை அதே மனநிலையில்தான் இருப்பார். அதன் பின் கிடைக்கும் வெற்றி, தோல்வி பற்றி அறிந்துகொண்டு வியூகங்களை மாற்றி அமைப்பார். இங்கே அதிமுக, தவெக கூட்டணி என்ற பேச்சு வர காரணமே மாநாட்டில் விஜய் அந்தக் கட்சியை தாக்கி பேசவில்லை என்பதுதான்.

எடப்பாடியும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தினார். விஜய் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. இதனால் ஊகங்கள் ஏற்பட்டன. கடந்த 10 நாட்களாக அதிமுக கூட்டணி பற்றி பேச்சுகள் பொதுவெளியில் நடந்து வந்தது. அதற்கு தவெக பெரிய அளவில் மறுப்பு சொல்லவில்லை. இனியும் பொறுத்தால் கட்சியின் மதிப்பு பாதிக்கும் என உணர்ந்ததால் இந்த அறிக்கையை ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

விஜய் கட்சி தொடங்கிய உடன் அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்தார். அப்போது அவரை பாஜக பி டீம் என்றார்கள். பிறகு பாஜக திட்டங்களை அவர் எதிர்க்க தொடங்கிய பிறகு அந்தத் தோற்றம் பொய்யானது. மாநாட்டில் திமுகவை மட்டும் விமர்சித்ததால், அதிமுக மீது ஒரு மென்மையான போக்கை விஜய் கடைப்பிடிக்கிறார் என்றார்கள். அதுவும் இப்போது உடைந்துள்ளது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு சதவீதம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். அதிமுக 20% உள்ளது. திமுக கூட்டணிக்கு 30% உள்ளது. இது சட்டமன்றத் தேர்தல் போது அதிகரிக்கலாம். அதிமுகவும் திமுகவுக்கும் சேர்த்து 60% வாக்குகள் இருக்கும். மீது உள்ளது 40%. அதில் பாஜக கூட்டணி 15% போய் விடும். மீதி 25%. அதில் 20% பாஜக எதிர்ப்பு ஓட்டு. கூடவே அதிமுக மற்றும் திமுகவை விரும்பாதவர்கள் ஓட்டும் இதுதான். இதில் பாமகவைச் சேர்க்க முடியாது. அக்கட்சி பாஜகவில் இருக்கிறது. ஆக, 20% குறி வைத்துத்தான் விஜயகாந்த் அரசியல் செய்து வெற்றி பெற்றார். அதே வழியைத்தான் விஜய் இப்போது கையில் எடுக்கிறார்.

பாஜக என்ன சொல்கிறது என்றால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சேர்த்து 50% வாக்கு கிடைக்கும் என்கிறது. ஆளும் கட்சி எதிர்ப்பு என்பது இருக்கும் என்று சொல்கிறார்கள். என்னால் அதை ஏற்க முடியவில்லை. சட்டசபைத் தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தல் வேறு. அப்படிப் பார்த்தால் திராவிட கட்சி இரண்டுக்கும் 65% வாக்குகள் வரை கிடைக்கலாம்.

பாஜகவுடன் விஜய் போகமாட்டார். சின்ன சின்ன கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தால், அவர் கட்சிக்கு 10% கிடைக்கலாம். கூட்டணியைச் சேர்த்தால் 12% கிடைக்கலாம். இதில் நாதகவுக்கு 8% வாக்குகள் உள்ளன. அவர் அமைக்கப் போகும் வியூகத்தின் அடிப்படையில் அந்த வாக்கு சதவீதம் உயரலாம். அப்படிப் பார்த்தால், விஜய் கட்சிக்குப் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியாது.

அதிமுக கூட்டணியுடன் போகும் போது இந்த நிலை தலைகீழாக மாறலாம். எடப்பாடி மவுனமாக இருக்கிறார். அவர் பாஜக கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே வெளிப்படைத்தன்மை விஜய் விவகாரத்தில் இல்லை. எனவே இப்போதைக்கு தவெக வெளியிட்டுள்ள அறிக்கை அந்தக் கட்சியைப் பொறுத்தவரை நல்லது. மற்றபடி பெரிய இழப்பு அதிமுகவுக்கு இல்லை" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+