75வது ஆண்டு சுதந்திர தினவிழா: சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பவர்கள் யார் - மத்திய அரசு புதிய உத்தரவு
75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளாது. முதல் முறையாக சென்னை கோட்டையில் கொடியேற்றப்போகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னை: சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறப்பு விருந்தினர்களாக யாரை அழைக்கலாம் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல மாநில அளவில் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதன் முறையாக சென்னை கோட்டையில் கொடியேற்ற உள்ளார். மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
கொரோனா பரவல் காலம் என்பதால் விழாவை கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய உள்துறையில் இருந்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், கொரோனா பரவல் நீடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தினவிழா நடப்பதால் நோய் தொற்று மேலும் பரவிவிடும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது. எனவே சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலைதளம் மூலமாக காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிர்ப்பில் போராடிய டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை சுதந்திர தின விழாவில் கவுரவிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு அழைப்பு விடுத்து விழாவில் பங்கேற்க செய்யலாம். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.
தேச பக்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்களை சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மக்களிடம் பரப்ப வேண்டும். தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும். முக்கிய இடங்கள், முக்கிய பொது கட்டிடங்கள் ஆகியவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.
'ஆத்மநிர்பார் பாரத்' பொருளாதார திட்டம் போன்றவற்றை மக்களிடம் பரப்பும் வகையில் பிரசாரங்கள் செய்யப்பட வேண்டும். விழா கொண்டாடப்படும் இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, கட்டாயமாக முககவசம் அணிதல், அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சுதந்திர தினவிழா ஒத்திகை
இதனிடையே சென்னையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல வரும் 9 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை கோட்டை பகுதியில் ஒத்திகை நடைபெற உள்ளது. அந்த 2 நாட்களிலும் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். அதன்படி நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.
காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்கசாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக போக வேண்டும்.
அண்ணாசாலையில் இருந்து கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜாஅண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியாக போகலாம். முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம்.
என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் 75வது சுதந்திர தினவிழாவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications