சுற்றிலும் இருட்டு.. வலையில் சிக்கிய எடப்பாடி.. இனி அவ்ளோதான்?- இந்த ட்விஸ்டை பன்னீரே எதிர்பார்க்கல!
சென்னை : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் பதவியை எட்டுவதற்காக எல்லைக் கோட்டிற்கு அருகில் காத்திருக்கும் நேரத்தில், ஈபிஎஸ்ஸூக்கு எதிராக பெரிய கன்னிவெடி ஒன்றும் டெல்லியில் காத்திருக்கிறது.
Recommended Video
பொதுக்குழுவை நடத்துவதற்கு எதிராக ஓபிஎஸ் குடைச்சல் கொடுப்பது ஒருபக்கம் என்றால், ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் ரெய்டில் சிக்குவது இன்னொரு பக்கம். மூன்றாவதாக தலைக்கு மேல் கத்தியாக டெல்லி உச்சநீதிமன்ற விசாரணையும் இருக்கிறது.
இப்போதுதான், பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெற்று வந்த நேரத்தில், அரசியல் வாழ்க்கைக்கே ஆப்பு வைக்கும் வழக்கு ஒன்று திங்கட்கிழமை டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஊழல் வழக்கு
தான் முதல்வராக இருந்தபோது ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கிய புகாரில் 2018ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமையன்று அதிமுக பொதுக்குழு நடக்கும் அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்குதான் எடப்பாடி பழனிசாமியின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கே குறி வைத்திருக்கும் கத்தி.

4,800 கோடி ஊழல் புகார்
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறப்பு விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.

வழக்கு விபரம் என்ன?
முந்தைய அதிமுக ஆட்சியில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு 713.34 கோடியாக இருந்த நிலையில், நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த பணிக்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் எஸ்பிகே அன்ட் கோ நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இதன் உரிமையாளரான நாகராஜன் செய்யாத்துரை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்.

இமாலய முறைகேடு
இதுபோல, தமிழகம் முழுவதும் சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பி. சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

திங்கட்கிழமை விசாரணை
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வந்த நிலையில், மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை, அதே முதல்வர் நெடுஞ்சாலைத் துறையில் செய்த ஊழல் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தவில்லை எனக் கூறி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தான் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

ஒரே புள்ளியில்
அதிமுக பொதுச் செயலாளர் ஆவதற்காக வரும் திங்கட்கிழமையன்று 9.15 மணிக்கு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவுக்குத் தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து அதே திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அதே திங்கட்கிழமை அன்றுதான் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றசாட்டில் சிபிஐ விசாரணை நடக்குமா என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.

பரீட்சை
ஆக மொத்தம், வரும் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு மும்முனைத் தேர்வு காத்திருக்கிறது. எந்த ஒன்றில் அவருக்கு எதிராக நடந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு அது பெரிய சிக்கலாகிவிடும். ஊழல் புகார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தால், கட்சியிலேயே பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவும் கூடும், எல்லாமே தனக்கு எதிராகத் திரும்பி விடும் என்பதால் அந்த வழக்கு விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார் ஈபிஎஸ்.

நெருக்கமானவர்களுக்கு குறி
அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் முயற்சிகளில் அவருக்கு சாதகமான பலன்கள் கிடைத்து வரும் நிலையில், சமீப சில நாட்களாக அவருக்கு நெருக்கமான பலர் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படும் செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த செய்யாதுரை, எடப்பாடி மீதான 4800 கோடி ஊழல் குற்றச்சாட்டிலும் தொடர்புடையவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ரெய்டு அட்டாக்
இதுபோக, எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் வருமான வரி அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளார். அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ரெய்டுகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதோ கதி
இந்நிலையில், ஈபிஎஸ் ஊழல் வழக்கு தொடர்பாகப் பேசியுள்ள அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சிபிஐ விசாரிக்கலாமா வேண்டாமா என்ற வழக்கை திங்கட்கிழமை காலை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. அதில் என்ன உத்தரவு வருகிறது என்று தெரியாது. எடப்பாடி பழனிசாமி ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டால் எடப்பாடி கதி அதோ கதி ஆகிவிடும் என தெரிவித்துள்ளார். உண்மையில் எடப்பாடி பழனிசாமியின் நிலையும் அது தான்.












Click it and Unblock the Notifications