மழை வெள்ளத்தை எல்லாம் விடுங்க.. ஆவின் பால் பண்ண சம்பவம் தெரியுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அடாத மழையிலும் விடாது பணியாற்றி சென்னையில் நேற்று ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, முடிச்சூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி கடல்போலக் காட்சியளித்தது.

பல்வேறு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சென்னையில் அதிகப்படியான கன மழை பெய்ததால், நேற்று மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத அளவிற்கு அவதிக்குள்ளாகினர். பல சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகமாக இருந்தது.
மேலும், தொடர் மழை காரணமாக சென்னையில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை வியாபாரிகள் கடுமையாக உயர்த்தி விற்பனை செய்தனர். அடாத மழை பெய்த போதிலும் ஆவின் நிர்வாகம் சார்பில் தங்கு தடையின்றி அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் பால் சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் ஆவின் பால் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்கும் வகையில் ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுமக்களுக்குத் தேவையான பாலை விநியோகம் செய்யும் வகையில், 201க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால் பொருள்களும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களில் இருந்தும் தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவருகிறது.
இந்நிலையில், நேற்று பலத்த மழை பெய்த நேரத்திலும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications