விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளும், குடும்பத்தினர் பகிரும் உணர்வுபூர்வமான தருணங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் தனது அண்ணன் பற்றிய நினைவுகளையும், இறுதி சடங்கு நடைபெற்ற விதத்தையும், குறிப்பாக முதலமைச்சர் விஜய் செய்த உதவிகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பாரதிராஜா மறைவு
தமிழ் சினிமாவை ஸ்டூடியோவுக்குள் இருந்து கிராமத்து மண்ணுக்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக்குறைவால் காலமான செய்தி வெளியானதும் ரசிகர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.
இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, ராதிகா சரத்குமார், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தன.
அரசு மரியாதையுடன் இறுதி பயணம்
பாரதிராஜாவின் திரைப்பணியை கவுரவிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வசதிகள் வரை அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டன. பின்னர் பாரதிராஜாவின் விருப்பப்படி அவரது சொந்த மண்ணான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே இறுதிச்சடங்கு நடைபெற்றது.
பாரதிராஜா தம்பி பேட்டி
இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஜெயராஜ், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். "விஜய் சார் மட்டும் இல்லன்னா எங்களால இவ்வளவு பெரிய விஷயங்களை செஞ்சிருக்க முடியுமானு தெரியல. அண்ணன் ஆசைப்பட்ட மாதிரி அமைதியா, மரியாதையா எல்லா காரியமும் நடந்துச்சு.
சென்னையில் இருந்து தேனிக்கு உடலை கொண்டு போய், அங்க ஆயிரக்கணக்கான மக்களோட இறுதி அஞ்சலியை நடத்தி, இறுதிச்சடங்கை முடிச்சிருக்கோமா இல்லையா என்பதே தெரியாது.
வந்த மக்களை கவனிக்கவே முடியாத நிலை. ஆனா விஜய் சார் சொன்னதால போலீசார் முதல் அதிகாரிகள் வரை எல்லாரும் எங்களுக்கு துணை நின்றாங்க. நன்றி சொல்லணும்னா 'நன்றி'ங்கிற வார்த்தை மட்டும் போதாது. எங்க குடும்பத்துக்கு அவ்வளவு பெரிய உதவியை அவர் செய்திருக்கிறார்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ரசிகர்களை நெகிழ வைத்த தருணம்
ஜெயராஜ் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "துயரமான நேரத்தில் உதவி செய்ததை குடும்பத்தினர் மறக்காமல் நினைவு கூர்கிறார்கள்", "அரசியலை தாண்டி மனிதநேயம் முக்கியம்", "பாரதிராஜாவுக்கு கிடைத்த மரியாதை அவருடைய சாதனைகளுக்கான அங்கீகாரம்" என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜாவுக்கு கிடைத்த கடைசி மரியாதை
தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றிய மனிதருக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் நேசித்த மண்ணிலேயே அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் அவரது குடும்பத்தினர் நேரடியாக வந்து, "இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு துணை நின்றவர்களை மறக்க முடியாது" என்று கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாரதிராஜா இன்று உயிரோடு இல்லாவிட்டாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், அவர் காட்டிய கிராமத்து வாழ்க்கையும், அவர் விதைத்த சினிமா மரபும் என்றும் உயிரோடு இருக்கும். ஆனால் அந்த மகத்தான கலைஞரின் இறுதி பயணம் மரியாதையுடன் நிறைவடைய காரணமானவர்களுக்கு அவரது குடும்பம் தெரிவித்த நன்றிதான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications