முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட "அப்பாவி" மாணவர்களை கைது செய்துவிட்டார்கள்.. ஆளுநரிடம் ஏபிவிபி தஞ்சம்
சென்னை : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராடிய அப்பாவி மாணவர்களை போலீசார் அத்துமீறி தாக்கி கைது செய்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஏபிவிபி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும், கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய சொன்னதுதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் வார்டன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்திய அனைவரையும் இழுத்துச்சென்று காவல்துறையினர் வேனில் ஏற்றினர்.
மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராடிய அப்பாவி மாணவர்களை போலீசார் அத்துமீறி தாக்கி கைது செய்ததாகவும், திமுகவின் ஏவல் துறையாக தமிழக காவல்துறை செயல்படுவதாகவும் கூறி, தமிழக ஆளுநரிடம் ஏபிவிபி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications