மின்சார வாரியம் திகைப்பு: தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட மின் தேவை!
சென்னை: ஏசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின் நுகர்வு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சட்டசபை தேர்தல், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட காரணங்களால், மாநிலம் முழுதும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், இரவில் மட்டுமின்றி, பகலிலும், ஏசிசாதன பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் மின் நுகர்வு, 46.61 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் மின்சாரத் தேவை இதுவரை கண்டிராத ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது..

குறிப்பாக இரவு நேரங்களில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.. இந்த வருடம் கோடை காலத்தில் 2-வது முறையாக தமிழகத்தின் மின் தேவை 21,000 மெகாவாட் என்கிற பிரம்மாண்ட எல்லையை கடந்து சாதனை படைத்துள்ளது..
தமிழகத்தின் மின்சார தேவை
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மாநிலத்தின் மின்சாரத் தேவை 21,060 மெகாவாட்டாக பதிவாகி ஒரு புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியிருக்கிறது.. வழக்கமாக பகல் நேரங்களில் இருக்கும் உச்ச மின் தேவை, இந்த முறை நள்ளிரவை ஒட்டி ஏற்பட்டிருப்பது மின் வாரிய அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் சொல்லும்போது, பொதுவா மதியமோ அல்லது மாலை நேரத்திலோ தான் மின் தேவை அதிகமாக இருக்கும்.. ஆனால் இந்த வருஷம் ராத்திரி நேரத்துல வெயிலோட தாக்கம் அதிகமா இருக்குறதால, மக்கள் எல்லாரும் வீடுகளில் ஏசியை அதிகமா பயன்படுத்துறாங்க.. இதுதான் இரவு 10.30 மணிக்கு மின் தேவை இவ்வளவு அதிகமா போனதுக்கு முக்கியமான காரணம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்..
சென்னை ஏசி பயன்பாடு
இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 17ம் தேதி தான் மின் தேவை 21,010 மெகாவாட்டா பதிவாகியிருந்தது நினைவிருக்கலாம்... அன்றைய தினசரி மின் நுகர்வு மட்டும் 462.38 மில்லியன் யூனிட்டுகளை தொட்டுள்ளது.. இது தமிழக வரலாற்றிலேயே பதிவான மிக உயர்ந்த மின் நுகர்வு அளவை விட வெறும் 0.3 மில்லியன் யூனிட்டுகள் மட்டுமே குறைவு.. இந்த பிரம்மாண்டமான மின் தேவையை சமாளிக்க பல்வேறு வழிகளில் இருந்து மின்சாரம் திரட்டப்பட்டது.
தமிழக அரசின் மின் நிலையங்கள் மூலம் 77 மில்லியன் யூனிட்டுகளும், மத்திய அரசின் பங்களிப்பாக 127 மில்லியன் யூனிட்டுகளும் கிடைத்தன.. இது தவிர ஒப்பந்தங்கள் மூலமாக 86.5 மில்லியன் யூனிட்டுகளும், சந்தையில் இருந்து நேரடியா 72.177 மில்லியன் யூனிட்டுகளும் வாங்கப்பட்டு நிலைமை சீராக கையாளப்பட்டது..
மின்சார வாரியம் உறுதி
மின் விநியோகத்தில் எவ்விதத் தடையுமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டாலும், சென்னையின் ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் மின் தடையால் பெரும் அவதிக்குள்ளாகினர்..
குறிப்பாக கொளத்தூர், அண்ணா நகர் மேற்கு, வானகரம் மற்றும் சிட்லபாக்கம் போன்ற இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நீண்ட நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.. இந்தத் தற்காலிக மின் தடைகளுக்குப் போதிய மின்சாரம் இல்லாதது காரணமல்ல என்றும், உள்ளூர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளே இதற்குக் காரணம் என்றும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஏசி பயன்பாடு அதிகரிப்பு
மிக அதிகப்படியான மின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் உள்ளூர் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் ஏற்பட்ட பழுதுகளே இந்தப் பாதிப்புகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது..
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால், மின்சாரத் தேவை மேலும் உயர வாய்ப்புள்ளது.. இதனைச் சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின் வாரியம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..
அதேசமயம், பழைய மின் விநியோகக் கட்டமைப்புகளை முழுமையாக மேம்படுத்தினால் மட்டுமே, இது போன்ற உச்ச மின் தேவையின் போது ஏற்படும் திடீர் மின் தடைகளைத் தவிர்க்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது..












Click it and Unblock the Notifications