’குதிரையை’ கழற்றி விடும் விஜய்! ஜூன் மாதத்தில் தவெகவில் மெகா மாற்றம்! எல்லாம் நல்ல செய்தி தான் நண்பா
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஜூன் மாதம் முதல் முழுமையாக அரசியலில் களம் இறங்க இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவிலும் அரசியல் என இரட்டைக் குதிரையில் பயணித்து வந்த அவர் இனிமேல் முழு நேர அரசியல் தான் என முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் தவிர்த்து ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 2 லட்சம் பேருக்கு அடுத்த மாதம் பதவி வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பல ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவார் எனக் கூறப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்தார். அதற்கு பிறகு மாநாடு, மாவட்ட செயலாளர் உடன் ஆலோசனை, அவ்வப்போது மக்கள் சந்திப்பு என வலம் வந்த அவர், தனது கடைசி பணமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இதுவரை அரசியல் சினிமா என இரு குதிரைகளில் பயணித்த அவர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளார். இது ஒரு புறம் இருக்க தற்போது தமிழக வெற்றி கழகத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது.

அடுத்ததாக மாநகரம், நகரம், ஒன்றியம், மற்றும் கிளை கழக அளவிலான நிர்வாகிகள் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் 'லோக்கல் பாலிடிக்ஸ்' செய்யும் நிர்வாகிகள் தங்களது பெயர் எப்போது வெளியாகும் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுப்பதாக கூறப்படும் நிலையில் சிலர் தங்களுக்கு பதவி கிடைக்காது என அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை சமாளிக்க சார்பு அணிகளில் மாநிலம் முதல் ஒன்றிய அளவிலான பதவிகள் கொடுக்கப்பட இருக்கிறது.
அதாவது மாவட்ட செயலாளர்கள் மட்டுமில்லாமல் சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் விரைவில் வெளியாக இருக்கிறது. கட்சியில் தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சார்பு அணிகளுக்கும், மாநில செயலாளர்கள், மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர், துணைத் தலைவர், ஒன்றியத்திலும் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் வழக்கப்பட இருக்கிறது.
தற்போது விஜய் கட்சியில் 28 சார் அணிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, வழக்கறிஞர் அணி, ஊடக அணி, கொள்கை பரப்பு மற்றும் பேச்சாளர் அணி, பயிற்சி மற்றும் தொண்டர்கள் முன்னேற்ற அணி, உறுப்பினர் சேர்க்கை அணி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அணி, வரலாற்று தரவு ஆய்வு மற்றும் உண்மை சரிபார்ப்பு அணி, திருநங்கைகள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, இளம் பெண்கள் அணி, குழந்தைகள் அணி, தொண்டர்கள் அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, நெசவாளர் அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி, உழைப்பாளர் அணி, தொழில் முனைவோர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் அணி, மருத்துவர் அணி,விவசாய அணி, கலை இலக்கியம் பண்பாட்டு அணி, தொண்டர்கள் அணி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அணி ஆகியவை உள்ளன.
எனவே 28 அணிகளுக்கும் மாநிலம் தொடங்கி மாவட்டம் வரை சுமார் 2 லட்சம் நிர்வாகிகள் நியமனம் நடைபெற இருக்கிறது. இதனால் கட்சியில் இளைஞர்கள் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்பதால் கட்சியினர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதும் 67,000 பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர், ஏற்கனவே அவர்களில் ஒரு பகுதியினரை கோவையில் விஜய் சந்தித்து பேசிய நிலையில் அடுத்ததாக காஞ்சிபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஏஜென்ட் மாநாடு நடைபெற இருக்கிறது. இப்படியாக ஜூன் மாதம் முதல் முழுக்க முழுக்க அரசியலில் இறங்கும் விஜய் நிர்வாகிகளை உற்சகப்படுத்த பதவிகளை அள்ளி வழங்க திட்டமிட்டு இருக்கிறார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வரும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.












Click it and Unblock the Notifications