Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அன்புள்ள விஜயகாந்த் அவர்களுக்கு... உங்களை ஏன் இந்த மக்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா?!"

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்புள்ள விஜயகாந்த் அவர்களுக்கு...

Recommended Video

    அன்புள்ள விஜயகாந்த்.. உங்களை ஏன் மக்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா?!

    ஒரு சராசரி ரசிகையின் கடிதம் இது.. உங்களை ஏன் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா?!

    ஹீரோக்கள் என்றாலே செக்க செவேல் என்று இருப்பார்கள் என்ற மாயையை அறுத்தெறிய நீங்கள் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல... வெற்றிக்கு தடையாக இருக்கும் உங்கள் நிறத்துக்கு மாற்றாகவும், இணையாகவும் நீங்கள் தேர்ந்தெடுத்தது சண்டை காட்சிகளை தான்.. ஆனால், அதையே உங்கள் அடையாளமாகவும், அடிப்படையாகவும் மாற்றிக் கொண்டீர்கள்.. உங்களது லெக் ஃபைட் குழந்தைகளிடமும் ஃபேமஸ் ஆனது.. எத்தனையோ ஹீரோக்களுக்கு உங்கள் ஃபைட் தான் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.. உங்களின் ஆரம்ப கால இந்த முயற்சி உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    vijayakanth the darling of poor people of tamil nadu

    நூற்றுக்கணக்கான டைரக்டர்களை அறிமுகப்படுத்தினீர்.. "விஜயகாந்த் சார் புண்ணியத்தால்தான் நாங்கள் வாழ்கிறோம்" என்று பலர் புளகாங்கிதம் அடைகிறார்கள்.. "விஜி சார் ஆபீஸ்ல சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது" என்று பலர் நன்றி மறக்காமல் சொல்கிறார்கள்.. அரைகுறையாக சாப்பிட்டு கொண்டிருந்த கடைநிலை சினிமா தொழிலாளர்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் முதன்முதலில் சாப்பாடு போடும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது நீங்கள்தான்.. உங்கள் மூலம் சிகிச்சை உதவி பெற்று உயிர்பெற்று நடமாடி கொண்டிருப்பவர்கள் மட்டும் லட்சத்திற்கும் மேல்! இந்த ஈரமனசு உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    பாகிஸ்தான் என்று பேச்சை எடுத்தாலே, ஏனோ தெரியவில்லை உங்கள் ஞாபகம்தான் வருகிறது.. காக்கி சட்டையை சினிமாவில் பார்த்தாலும் நீங்கள்தான் கண்முன்னாடி வந்து முறைத்து கொண்டு நிற்கிறீர்கள்.. ரெட் கலர் கண்ணை உருட்டி, மிரட்டி கொண்டு, கையில் லத்தியுடன் விறைப்பாக நீங்கள் நடந்து வரும் காட்சியை தியேட்டரில் கண்டு பிரம்மித்தவர்கள் ஏராளம்.. கண்ணியமான போலீஸாகவே வாழ்ந்து வாழ்ந்து.. அந்த கண்ணியத்தையும் நேர்மையையும், நடிப்பின் மூலம் மக்களிடம் கடத்தினீர்கள்.. அந்த அடையாளம்தான் உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று, நீங்கள் செய்த உதவிகள் தமிழகம் அறிந்த ஒன்று.. நட்சத்திர கலைவிழா நடத்தி அதில் வந்த பணத்தை வைத்து சங்க கடனை அடைத்தது... மிச்சம் பணத்தையும் சேமிப்பில் வைத்துவிட்டு போனீர்கள்.. அதோடு சரி.. சேமிப்பு என்று ஒன்று நடிகர் சங்கத்தில் அதற்கு பிறகு வந்ததா என்றுகூட தெரியவில்லை.. மறைந்த தலைவர் கருணாநிதிக்கு நீங்கள் எடுத்த பாராட்டு விழாவை கண்டு வியந்துபோன அவர், அன்று இரவே வீட்டுக்கு அழைத்து உங்களை மனசார பாராட்டவும் செய்தார்.. இப்படி ஒரு அசாத்திய திறமை உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    தாய் மொழி வேறுவாக இருந்தாலும், தமிழ் மீது உங்கள் பற்று, தமிழக மக்கள் மீது உங்களின் பாசம், தமிழ் படத்தை தவிர, வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று நீங்கள் செய்த சத்தியம்.. இப்படி பல ஸ்பெஷல்கள் உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு அரசியல் பிம்பங்கள் இருந்தும்.. ரஜினியே அரசியலுக்கு வர தயங்கிய காலகட்டத்தில் புயலென அரசியலுக்குள் நுழைந்தீர்கள்... உங்களின் முதல் தேர்தல் பிரச்சாரமே திரும்பி பார்க்க வைத்தது... அதற்கு காரணம், அந்த பேச்சில் இருந்த ஒவ்வொரு வரிகளும் சாதாரண மக்களுக்கு புரியாமல் போயிருக்கலாம். ஆனால் தடுமாறாத அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்தான் அன்று எத்தனை பேர் தெரியுமா!? 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வியப்பில் ஆழ்த்தியதுடன், பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு மிகப்பெரிய சக்தியாகவும் மாறினீர்கள்.. இந்த விஸ்வரூப வெற்றி உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    எத்தனை உயரத்துக்கு போனாலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தாலும் சரி, எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை வெளிப்படுத்தி கொள்ளும் நிஜ எளிமை, கெத்து காட்டாத பேச்சு முதல், "தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்ற வார்த்தை வரை உங்களை அணுஅணுவாக ரசித்து மகிழ்ந்தோம்.. உங்கள் பேச்சை வைத்துதான் மற்ற பிரமுகர்களை கலாய்க்கும் அளவுக்கு சோஷியல் மீடியாவில் மீம்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.. ஆனால், விதவிதமாக ட்ரோல் செய்தும், எந்தவித கோபத்தையும், ஏன் வருத்தத்தையும் கூட நீங்கள் இதுவரை எங்களிடம் காட்டியதில்லை.. இந்த முதிர்ச்சி பக்குவம் உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    கூழை கும்பிடு போட்டுக் கொண்டு, சொந்த கட்சி உட்பட உதிரி கட்சிகள் வரை "அம்மா" என்று அழைத்தவர்கள் மத்தியில், வளையாத முதுகெலும்புடன் கம்பீரமாக நின்று "ஜெயலலிதா" என்று பெயரை சொல்லி அழைத்த துணிச்சல் உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    "குறிப்பறிந்து உதவுதல்" என்று சொல்வார்களே.. அதற்கு சரியான உதாரணம் நீங்கள்தான்.. எந்த நிலையிலும் ஒரு மனிதன் தன் இயல்பை விட்டு இழப்பதில்லை என்பதற்கும், விட்டு தருபவர் கெட்டு போக மாட்டார்கள் என்பதற்கும் இன்றுவரை உதாரணமாக இருக்கிறீர்கள்.. இந்த பண்பு உங்களிடம் எங்களுக்கு பிடித்தது!

    தனியாக ஒரு கட்சியை வைத்து நடத்தி வந்தாலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லா தலைவர்களுக்கும் உங்களை பிடித்திருக்கிறது.. யாராலுமே வெறுக்க முடியாத ஆளுமை சார் நீங்கள்.. ஆனால், சில வருடங்களாக தள்ளாமையில் இருக்கும் உங்களை பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நெஞ்சை அடைத்து கொள்கிறது!

    எங்களுக்கெல்லாம் ஒரே ஒரு ஆசைதான் சார்.. மறுபடியும் அந்த பழைய தென்னவனை பார்க்கணும்.. ரமணாவை பார்க்கணும்.. எங்களுக்காக விஸ்வரூபம் எடுத்த அந்த விஜயகாந்த்தை பார்க்கணும்.. நிறைய வேலை இருக்கு சார்.. தமிழகமே காத்திருக்கு.. சீக்கிரம் சரியாகி ஜம்முன்னு பழைய பன்னீர் செல்வமா திரும்பி வாங்க சார்!

    மொத்தத்தில், நாம் எங்கு இருக்கிறோமோ - எந்த துறையில் இருக்கிறோமோ - யார் மத்தியில் வாழ்கிறோமோ - அவர்களுக்காக வாழ்வது, அவர்களது உயர்வுக்காக உழைப்பது, பலனை எதிர்பாராமல் பாடுபடுவதுதான் மனிதனாய் பிறந்ததற்கு காரணம் என்ற அர்த்தத்தை புரிய வைத்தவர் நீங்கள்தான் விஜயகாந்த் சார்.. ஹேப்பி பர்த்டே!!

    - இப்படிக்கு உங்கள் ரசிகை..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+