இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி- விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை : நாளை விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஒற்றுமை ஓங்கட்டும் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி எனக் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
'கோட் வேர்டு’.. 'ஒற்றுமை ஓங்கட்டும்’.. ஓ.பன்னீர்செல்வத்தின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

ஈபிஎஸ் வாழ்த்து
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஞான முதல்வனாம், வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னல்களை எல்லாம்
இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும்." எனக் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர், ஜெ வழியில்
மேலும், "வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்ற வாக்கிற்கு இணங்க விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும், வாழ்வை செழிப்பாக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, நம் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அமைதி நிலவட்டும்
இதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விநாயகர் சதூர்த்தியையொட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்" என வாழ்த்தியுள்ளார்.