கூட்டணி புகைச்சல்.. வெள்ளம் மீறுனா வேற என்ன பண்றது.. ‘வேற மாதிரி’ பிளான் போடும் அதிமுக.. ஆத்தாடி!
சென்னை : பா.ஜ.க - அ.தி.மு.க இடையேயான இணக்கம் சமீபகாலமாக வெகுவாகக் குறைந்து மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்னையனின் பேச்சு கூட்டணிக்குள் பெரிய புகைச்சலையே ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதால், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் இந்தச் சிக்கலை கையாள முடியாமல் விழிபிதுங்கிப் போயுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக கழற்றி விடப்படும் என்றும், அதிமுக கூட்டணியை வலுவாக்குவதற்கு வேறொரு திட்டத்தை அதிமுக வைத்திருக்கிறது என்றும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.+

அதிமுக பாஜக கூட்டணி
அ.தி.மு.க பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிட்டன. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணியாகவே தேர்தலை சந்திக்கக்கூடும் என்ற நிலை இருந்து வருகிறது. பிரதமர் மோடி உடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணக்கமாகவே இருந்து வருகின்றனர்.

அதிமுகவை தூக்கி சாப்பிடும் பாஜக
ஆனால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விடவும் திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக சார்பில் ஆளும் அதிமுகவுக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அதிமுக சரியாகச் செயல்படவில்லையோ என்ற விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

பாஜகவை முன்னிலைப்படுத்தி
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு அரசியல் சூழல் திமுக பாஜகவை மையப்படுத்தியே இருக்குமென பேசி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அண்ணாமலை கூறி வருகிறார். இது அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னையன் கொளுத்திப்போட்ட வெடி
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்றும், பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கூட்டணி கட்சியான பாஜக பற்றி பொன்னையன் இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக சார்பில் பதிலடி
இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அதிமுக சரிவர செயல்படவில்லை. பாஜகதான் அன்றாடம் ஆளும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறது. சட்டசபையில் அதிமுகவுக்கு 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் திமுகவின் ஊழல்கள் குறித்து சட்டசபையில் அவர்கள் பேச வேண்டும். தங்கள் மீது ரெய்டு வரும் என பயப்படுவதால் அவர்கள் பேசாமல் உள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

கொந்தளித்த எடப்பாடி
வி.பி.துரைசாமியின் விமர்சனத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து பாஜகவின் வி.பி.துரைசாமி போன்றவர்கள் நற்சான்று அளிக்க தேவையில்லை. வி.பி.துரைசாமி எந்தக் கட்சியில் இருந்து எங்கு போனார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை போல நாங்கள் கட்சி மாறுபவர்கள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கூட்டணிக்குள் புகைச்சல்
பொன்னையன் கொளுத்திப்போட்ட திரி சரசரவென பற்றி கூட்டணிக்குள் குண்டு வைத்துள்ளது. இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு கட்சிகளும் 2024 தேர்தலில் கூட்டணியில் நீடிப்பது சிக்கல்தான் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குள் பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அதிருப்தி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் 38 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கு பாஜக வுடன் கூட்டணி வைத்ததே காரணம் என அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கினர். ஆனால், வேறு வழியின்றி சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி வைத்தனர். பாஜகவால் அதிமுகவுக்கு பெரிய மைலேஜ் கிடைக்கவில்லை என்றாலும், பாஜக சார்பில் 4 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்றனர். அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்கிறது. பாஜக தேவையற்ற சுமை என அப்போதே விமர்சனங்கள் கிளம்பின.

பாஜகவை கழற்றிவிட திட்டம்
பாஜகவுடன் புகைச்சல் ஏற்பட்டுள்ளதால், இந்த சமயத்தை பயன்படுத்தி உறவை கத்தரித்து விட வேண்டும் என சீனியர்கள் பலரும் சொன்னாலும், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இரட்டை தலைமைக்கு அது எளிதான காரியமில்லை. இவ்வளவு நாள் ஏன் கூட்டணியில் இருந்தார்களோ, அதே காரணம் இப்போதும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், வெள்ளம் கழுத்தை மீறிச் செல்லும்போது வேறு வழியில்லை, கழற்றி விடத்தான் வேண்டியிருக்கும் என்கிறார்கள் ராயப்பேட்டை வட்டத்தினர்.
Recommended Video

பாஜக இல்லாத கூட்டணி
பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டுவிட்டு, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளையும், திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் சில கட்சிகளையும் இழுத்து வலுவான கூட்டணி ஒன்றை அமைக்க முடியும் என அதிமுக சீனியர்கள் கருதுகின்றனர். பாஜக இல்லாத கூட்டணியில் சேருவதற்கு, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தயக்கம் காட்டாது என்பதால் இந்த திட்டம் பலிக்கக் கூடும் என்றும் ஆரூடம் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications