சட்டப்படி செல்லாது.. அதிமுக அலுவலக வழக்கு உத்தரவு பற்றி ஓ பன்னீர் செல்வம் வக்கீல் விளக்கம்
சென்னை: அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கில் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் எந்த அதிகாரமும் இல்லை. சுவாதீனம் குறித்து எந்த வாதங்களும், ஆதாரங்களும், ஆவணங்களும் வைக்கப்படாத சூழலில் வருவாய் கோட்டாச்சியரின் அதிகாரத்தை தனது அதிகாரமாக நீதிமன்றம் பயன்படுத்தி உள்ளது. இது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. மேலும் மேல்முறையீடு செய்யத்தகுந்த வழக்காக உள்ளது என ஓ பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர் திருமாறன் கூறினார்.
Recommended Video
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை நீதிமன்றம் விசாரித்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றம் தீர்ப்பு
உயர்நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அப்போது ‛‛எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் அலுவலக சாவி உடனடியாக ஒப்படைக்க வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்க கூடாது.அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவும், ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.

ஓ பன்னீர் செல்வம் வழக்கறிஞர் பேட்டி
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பா ஓ பன்னீர் செல்வத்தின் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணை முடிவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு பகுதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்ய இரு மனு அனுமதிக்கப்பட்டு தலைமை கழக சாவியை அவரிடம் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

முக்கிய வாதங்கள் என்ன?
நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள முக்கிய வாதம் என்னவெனில் பிரிவு 145 மற்றும் 146 ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு செல்லாது என்பது தான் வாதமாக வைக்கப்பட்டது. இந்த நீதிமன்ற விசாரணையின் முக்கியமான அம்சம் என்னவென்று கூறினால் சுவாதீனம் யாரிடத்தில் உள்ளது என்பது குறித்து இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் 145ன் கீழ் 9 பிரிவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்படி செல்லத்தக்கது அல்ல
சுவாதீனம் யார் வசம் ஒப்படைக்கபட வேண்டும் என்பது குறித்து வருவாய் கோட்டாச்சியர் தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுத்து வைக்கப்பட்டு சீல் பிரிக்கப்படலாம் என சுவாதீனம் தெளிவாக கூறுகிறது. ஆனால் சுவாதீனம் குறித்து நீதிமன்றத்தில் எந்த வாதங்களும், ஆதாரங்களும், ஆவணங்களும் வைக்கப்படாத சூழலில் வருவாய் கோட்டாச்சியரின் அதிகாரத்தை நீதிமன்றம் தனது அதிகாரமாக பயன்படுத்தி உள்ளது. எனவே இது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.

மேல்முறையீடு செய்யத்தகுந்த வழக்கு
எனவே இது உடனடியாக மேல்முறையீடு செய்யத்தகுந்த வழக்கு. இந்த உத்தரவின் இறுதியில் நீதியரசர் ‛ஏ' பார்ட்டியிடம்(எடப்பாடி பழனிச்சாமி) வருவாய் கோட்டாச்சியர் சாவியை ஒப்படைத்தாலும் இன்றைய தேதியில் இருந்து ஒரு மாத காலத்துக்கு அவரது ஆதரவாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்ககூடாது என கூறியுள்ளார். இதன்மூலம் உத்தரவில் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதில் தெளிவான புரிதல் இல்லாத நிலை உள்ளது. இதனால் தான் ஒருமாதம் வரை யாரும் அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது எனும் உத்தரவை நிபந்தனையுடன் நீதிமன்றம் கூறி உள்ளது.

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை
இதில் இருந்தே சுவாதீனம் தொடர்பாக ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. சுவாதீனம் தொடர்பாக இந்த நீதிமன்றத்தில் முடிவு எடுக்க இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் எந்த வித அதிகாரமும் கிடையாது என்பது எங்களின் கருத்து. இதுபோன்று பகுதியாக அனுமதித்து, பகுதியாக சாவியை அனுமதிப்பது என்பது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக உள்ளது. இதனால் இது மேல்முறையீடு செய்யத்தகுந்த வழக்கு.

அதிகாரம் கையிலெடுப்பு
நீதிமன்றம் வருவாய் கோட்டாச்சியர் அல்லது சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை கையில் எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் முடிவு எடுக்க வேண்டியது என்பது சிவில் நீதிமன்றம் மற்றும் வருவாய் கோட்டாச்சியரிடம் தான் உள்ளது. அவ்வாறு ஒரு கேள்வி வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆதாரங்கள், விவாதங்கள் வைக்கப்படவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications