அம்மா மினி கிளினிக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடல்: எடப்பாடி பழனிசாமி, தினகரன் கடும் கண்டனம்
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அம்மா கிளினிக்குகளைப் போல அம்மா உணவகங்களையும் திமுக அரசு அடுத்து மூடிவிடுமோ எனவும் தினகரன் கேள்வி கேட்டுள்ளார்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. அம்மா கிளினிக்குகள் என்பவை தற்காலிகமான அமைப்புதான்.

மினி கிளினிக்குகள் ஏன் மூடல்?
இந்த கிளினிக்குகளுக்கு போதுமான செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. மருத்துவர்களையும் நியமிக்கவில்லை. இதனால் இந்த கிளினிக்குகள் செயல்படாமலேயே இருந்தன. இத்திட்டம் முடிந்துவிட்டது. இதில் பணியாற்றிய 1820 மருத்துவர்களும் இதர பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழக அரசின் அம்மா கிளினிக்குகளை மூடும் முடிவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் அவசர கதியில்...
டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கடந்த ஆட்சியில் அவசர கதியில் சரியான ஏற்பாடுகளின்றி அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டபோதே அவற்றிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

அம்மா உணவகமும் மூடலா?
அந்த கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக் கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்... புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது. இவ்வாறு தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications