இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. ஒன்னு சேரலாமே? பிரஷர் கொடுக்கும் ‘மேலிடம்’! விடாப்பிடி எடப்பாடி..!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவாகரம் தொடர்பாக அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென மீண்டும் ஒருமுறை டெல்லி மேலிடம் அழுத்தம் தந்ததாகவும், ஆனால் அடுத்த மக்களவை தேர்தலுக்குள் தன்னாள் முழு அதிகாரத்தையும் பெற்று பலத்தை நிரூபிக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி கட்சி பொறுப்பில் இருந்தபோதும் சரி அதிமுக எப்படி இருந்ததோ அதற்கு அப்படியே தலைகீழாக இருப்பதாக அக்கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
அவரது மறைவுக்குப் பின் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிக்கல்களை அதிமுக சந்தித்து வருகிறது. சசிகலா விவகாரம், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மோதல் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்கி பேசு பொருள் ஆவது தான் அதிமுகவின் வாடிக்கையாகி போனது.

அதிமுகவில் மோதல்
அந்த வகையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் மோதல் , எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி என மீண்டும் சிக்கல்களை சந்தித்து வந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தான் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்க, முடியவே முடியாது என அடம்பிடித்து வருகிறார் ஓபிஎஸ்.

ஒற்றைத் தலைமை
ஆனாலும் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது கிடைத்திருக்கும் நிலையில், அடுத்ததாக தேர்தலை சந்தித்து அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராகும் நாளை எதிர்நோக்கி அதற்காக அரசியல் நகர்வுகளை மிக சதூர்யமாக நகர்த்தி வருகிறார்.

ஓபிஎஸ் தீவிரம்
அதே நேரத்தில் இந்த முறை எப்படியும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ஓபிஎஸ் தீவிரமாக முயன்று வரும் நிலையில், சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரோடு இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்க முயன்று வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மனக்கசப்புகளை இணைந்து மீண்டும் ஒருமுறை இணைய பேச்சுவார்த்தை நடத்தலாம் என டெல்லி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள்
தற்போது சில அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இது இரு தரப்பிற்குமே பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதோடு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதால் வருகின்ற மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒன்றாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம் என கூறியிருக்கிறார்.

எடப்பாடி உறுதி
எப்படியும் அதிமுகவின் தலைமையை முழுமையாக கைப்பற்றி திமுகவுக்கு எதிராக வலுவாக கட்டமைப்பேன் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் அவ்வளவு செல்வாக்கு மிக்க தலைவர் இல்லை என்பது கடந்த சில நாட்களாக பட்டவர்த்தனமாக தெரியும் நிலையில் அவரை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என உறுதியாக கூறியுள்ளதாக கூறுகின்றனர் கொங்கு மண்டல ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications