மேடைக்கு வராத ஓபிஎஸ்.. ஒற்றைத் தலைமை எடப்பாடி தரப்பினர் முழக்கம் - பொதுக்குழுவில் கூச்சல் குழப்பம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
Recommended Video
தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு சென்றடைந்தார். இன்னும் சில நிமிடங்களில் ஓ.பன்னீர்செல்வம் மேடையாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் வருகையின்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எழுந்து நின்று ஒற்றைத் தலைமை குறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான சூழலில் பொதுக்குழு கூட்டம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் திரண்டுள்ளனர். பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவில் தீர்ப்பு வந்த பிறகு ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து 23 தீர்மானங்களை தவிர புதிதாக வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனும் நிபந்தனையோடு பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸூம் இந்த பொதுக்குழுவில் பங்கேற்கிறார்.

வாகன நெரிசல்
ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது வாகனங்களும் தற்போது ஒன்றாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணம் செய்து வந்தது. எடப்பாடி பழனிசாமியின் வாகனம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனம் மாற்று வழியில் பயணித்து திருமங்கலம் வழியாக விரைவாக வானகரம் வந்தடைந்தது.

வந்தார் ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு வந்தடைந்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்துக்கு முதலில் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போட்டி முழக்கமிட்டனர்.

முன்னணி நிர்வாகிகள் வரவேற்கவில்லை
ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்குள் வருகை தந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் எவரும் அவரை வரவேற்க செல்லவில்லை. முக்கிய நிர்வாகிகள் பலரும், மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.

ஒற்றைத் தலைமை முழக்கம்
அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது எடப்பாடி ஆதரவாளர்கள் எழுந்து நின்று ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கத்தை எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களின் முழக்கத்தால் பொதுக்குழு நடைபெறும் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைகைச்செல்வன் எழுந்து பேசி, பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், தொடர்ந்து இருதரப்பினரும் போட்டி முழக்கங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications