“பந்தயம் அடிச்சே ஆகணும்”.. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.. ஆதரவு திரட்டும் அதிமுக!
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு அதிமுக தலைவர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தனர்.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் அமர்ந்தது. இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு தரப்பாக பிரிந்து ஒரு தரப்பு தவெக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பு எதிராகவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதேசமயம் அதிமுக - திமுக இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு விலகியதாக 6 பேரும் தெரிவித்தனர். முன்னதாக முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டில் 7 சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல் வெற்றி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் எனவும், அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதியான் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி செப்டம்பர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தவெகவை வீழ்த்தி பாடம் புகட்ட வேண்டும் என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை திட்டம் தீட்டி வருகின்றன.
இந்த நிலையில் 2 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. ற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனுக்கள் நாளை மாலை வரை வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியான பாஜகவிடம் அதிமுக ஆதரவு கேட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து கடிதம் வழங்கி உள்ளனர். அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றனர்.
அங்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, 2 தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு தர கோரி கடிதம் அளித்தனர். இந்த 2 தொகுதிகளுமே அதிமுக வென்றிருந்த தொகுதிகள் என்பதால், இங்கு தங்கள் செல்வாக்கை நிரூபித்து தவெகவுக்கு பாடம் புகட்ட அதிமுக தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications
