பாமக வைக்கும் "பலே" டிமாண்ட்.. மாறுகிறதா கூட்டணி கணக்கு.. பரபரப்பில் அரசியல் களம்!
சென்னை: 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்தாலும் விதித்தது, தமிழ்நாடு அரசியலில், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
கொஞ்சம் அசந்தாலும், கூட்டணிகளே மாறும் நிலைமை உருவாகியுள்ளதால் அரசியலில் அனல் வீசத் தொடங்கியுள்ளது.
அதிலும், குறிப்பாக, அதிமுக-பாமக கூட்டணி என்ன ஆகும் என்பது பற்றிதான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது என்று கண் சிமிட்டுகிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில்.

பாமக கணக்கு
வேளாண் நிதி நிழல் அறிக்கை, பொது பட்ஜெட் நிழல் அறிக்கை என வெளியிட்டு தமிழக அரசியலில் தனது இருப்பை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில்தான், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தைலாபுரமும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய 9 மாவட்டங்களில் நெல்லை, தென்காசி ஆகிய இரு மாவட்டங்கள் தவிர மற்ற 7 மாவட்டங்களும் வட தமிழகத்தில்தான் இருக்கின்றன.

பாமக செல்வாக்கு
இந்த மாவட்டங்களில் பாமகவுக்கென்று தனித்த செல்வாக்கு ஓரளவுக்கு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் 20 சதவீத இடங்களை அதிமுகவிடம் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அப்படி 20 சதவீத இடங்களை ஒதுக்க இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இணங்க மாட்டார்கள் என்றே இப்போது வரை தகவல் வெளியாகிறது.

அதிமுக தலைமை சம்மதிக்குமா
சட்டசபைத் தேர்தலில் வட தமிழகத்தில் பாமக துணையோடு பெரிய வெற்றியை எதிர்பார்த்தது அதிமுக. ஆனால் அப்படியான வெற்றியை பாமகவால் அதிமுகவுக்கு கொடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இருக்கிறது. ஒருவேளை ராமதாசின் கோரிக்கையை எடப்பாடி ஏற்றுக் கொண்டாலும் பன்னீர் செல்வம் இதற்கு சம்மதிக்க மாட்டார்.

வடக்கே செல்வாக்கு இல்லை
ஏற்கனவே, ராமதாசின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், வடக்கு மண்டலத்தில் திமுக கூட்டணிதான் அதிக தொகுதியை வென்றது. அதிமுக வழக்கமாக வலிமையாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் மட்டும்தான் அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை விட அதிக தொகுதிகளில் வெல்ல முடிந்தது.

கூட்டணி என்னவாகும்?
உள் இட ஒதுக்கீட்டால்தான், அதிமுகவுக்கு தோல்வி கிடைத்தது என விமர்சித்தவர் ஓபிஎஸ்! அதனால், தைலாபுர தோட்டத்தின் நிபந்தனைகளை ஏற்கபடாது. அதிகபட்சம் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்கலாம் என்று நம்மிடம் பேசும் அதிமுக சீனியர்கள் சொல்கிறார்கள். 20 சதவீத இடங்களை ஒதுக்காமல் போனால் கூட்டணியை முறித்துக் கொள்ளக்கூட "டாக்டர் அய்யா" தயங்க மாட்டார் என்கிறது பாமக வட்டாரம். எனவே, கூட்டணிகளில் ஒரு கலகத்தை நடத்த காத்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல்.












Click it and Unblock the Notifications