அஸ்திவாரத்தையே ஆட்டிய எடப்பாடி.. பாஜகவை உலுக்கி பார்க்கும் அதிமுக.. என்னதான் நடக்குது? பின்னணி
2024 வரை கூட்டணி நிலைக்குமா அல்லது லாங் டிஸ்ட்னஸ் காதலர்கள் போல பிரேக் அப் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக பாஜக இடையிலான மோதல் கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி தாக்கிக்கொள்ள தொடங்கி உள்ளன. இதில் பாஜக கொஞ்சம் சைலண்ட் ஆனாலும் கூட அதிமுக விடுவதாக இல்லை என்றே தோன்றுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே அதிமுக - பாஜக இடையிலான கருத்து வேறுபாடு, மோதல் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அப்போதே பாஜகவின் வேட்பாளர் அறிவிப்பிற்கு எல்லாம் காத்திருக்காமல் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தார்.
பாஜகவிடம் ஆதரவு கேட்காமல்.. வேட்பாளரை அறிவிக்க போகிறோம் என்று மட்டும் போய் தகவல் சொல்லிவிட்டு வந்தனர். மற்றபடி ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் முடிந்த அளவு பாஜகவுடன் நெருக்கம் காட்டாமல் அதிமுக இருந்தது.

நெருக்கம் இல்லை
பாஜக தலைவர்களுடன் எடப்பாடி எங்கும் சேர்ந்து காணப்படவில்லை. அண்ணாமலை கூட ஒருநாள்தான் பிரச்சாரம் செய்தார். அப்போதும் அங்கே எடப்பாடி இல்லை. இவர்கள் இருவரும் சந்தித்தே பல மாதங்கள் ஆகின்றன. ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி தொடரும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி கூறினார். மற்றபடி வேறு எங்கும் பாஜகவுடன் தான் நெருக்கமாக இருப்பதாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. சிறுபான்மையினர் வாக்குகள் காரணமா அல்லது பாஜக - ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதால் ஏற்பட்ட அதிருப்தியா என்று தெரியவில்லை. எடப்பாடி பாஜகவுடன் நெருக்கம் காட்டவே இல்லை.

மோதல்
அதன்பின்தான் இவர்களுக்கு இடையில் மோதல் பெரிதானது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். அதிமுகவிற்கு சின்னம் கிடைத்தும், அமமுக, ஓபிஎஸ் தரப்பு போட்டியிடவில்லை என்ற போதிலும் கூட எடப்பாடி தரப்பு படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த நிலையில்தான் தேர்தல் முடிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலை ஒற்றை தலைமை குறித்து பேச தொடங்கினார். அவர் தனது பேச்சில், இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது. இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. மேலும் ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது, என்று அண்ணாமலை கூறி இருந்தார். அவர் ஒற்றை தலைமைக்கு எதிராக பேசுகிறாரே என்ற கேள்விகளை எழுப்பியது.

சீண்டல்
அண்ணாமலையின் பேச்சு எடப்பாடியை சீண்டும் வகையில் இருந்தது. இதற்கு எடப்பாடி பதில் சொல்லாதநிலையில்தான் நிர்மல் விவகாரம் உச்சம் எடுத்தது. பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இவர் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலையை கடுமையாக தாக்கிய போதும் நிர்மலை எடப்பாடி ஏற்றுக்கொண்டார்.

போஸ்ட்
அதன்பின் அண்ணாமலையை தாக்கிவிட்டு வருபவர்கள் எல்லோருக்கும் கட்சியில் புன்முகத்துடன் வரவேற்பு கொடுத்தார். அதிமுகவில் இணைந்த பின்பும் கூட அண்ணாமலையை நிர்மல் குமார் தாக்கி பேசினார். இப்போதும் பேசுகிறார். ஆனால் இதை எடப்பாடி கண்டுகொள்வதாகவே இல்லை. இதுதான் பாஜக தரப்பை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன அமர் பிரசாத், , ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பதிலடி
இதற்கு பதில் சொன்ன அண்ணாமலை பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்., என்றார். அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை ஒன்றும் ஜெயலலிதா கிடையாது. கட்சி தலைவர்கள் எல்லோரும் தலைவர்கள் ஆகிவிட முடியாது என்று ஜெயக்குமாரும் கூறி உள்ளார்.

கூட்டணி முறிவு
முத்தாய்ப்பாக அதிமுக தோல்விக்கு மைனாரிட்டுகள் வாக்கு கிடைக்காதது காரணம். பாஜகவால் 40 ஆயிரம் மைனாரிட்டிகள் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று செங்கோட்டையனும் வெளிப்படையாக கூறிவிட்டார். இப்படி பாஜகவை சரமாரியாகவும் அதிமுக அடித்து ஆடி வருகிறது. இவன் போற இடத்துல எல்லாமே கேட் போடுங்கடா என்று சொல்லும் அளவிற்கு பாஜகவை அதிமுக டீல் செய்ய தொடங்கி உள்ளது. இதனால் 2024 வரை கூட்டணி நிலைக்குமா அல்லது லாங் டிஸ்ட்னஸ் காதலர்கள் போல பிரேக் அப் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications