கரூர் கொடூரம்: 41 பேரின் மரணம் முதல், சிபிஐ விசாரணை வரை.. கலங்க வைக்கும் துயரத்தின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

கரூர்: உலக அளவில் கவனிக்கப்பட்டு.. நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்திய கரூர் துயர சம்பவம் சிபிஐ விசாரணைக்கு சென்று உள்ளது. 41 பேரின் உயிரை கொன்ற இந்த கொடுந்துயரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை என்றுதான் கூற வேண்டும். தீபாவளி கொண்டாட காத்திருந்தவர்களுக்கு.. இந்த வருடம் சோகமாக மாறி உள்ளது.. கரூர் மக்கள் மட்டுமன்றி மொத்த தமிழ்நாட்டிற்கும் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது!

கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாராந்திர பிரச்சாரத்தை மேற்கொண்டார். விஜய் பிற்பகல் வருவார் என்று ஆவலுடன் காத்திருந்த கூட்டம் அவர் மாலை 6.30 மணிக்கு வரும் வரை.. இடத்தை விட்டு அகலாமல்.. அவரை அன்புடன் வரவேற்க காத்திருந்தனர். அன்று இரவு தங்களுக்கு நடக்க போகும் துயரத்தை அறியாமல்.. அங்கே கூட்டம் நேரம் செல்ல செல்ல அதிகரித்துக்கொண்டே இருந்தது.

TVK Vijay

விஜய் மாலை 6 மணி தாண்டி வந்த நிலையில்.. அந்த மஞ்சள் வேன் கண்ணாடி வழியாக.. விஜயின் தரிசனம் கிடைக்காதா என்று பெண்களும், குழந்தைகளும், விஜயின் ரசிக படைகளும் கூட்டத்தில் முண்டியடித்தபடி காத்திருந்தனர். பிற்பகல் முதலே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இருந்ததால் பலருக்கு தண்ணீர் இழப்பு ஏற்பட்டு, உதடுகள் வற்றி, வயிறுகள் சுருங்கி, பசியின் பிடியில், பாதி மயக்கத்தில் விஜயின் முகத்தை காண நின்றிருந்தனர்.

விஜயின் பேச்சுக்கு இடையே அரங்கேறிய துயரம்

மக்களுக்கு இடையே தேர் போல ஊர்ந்து வந்த வேனில் இருந்தபடி விஜய் பேசியதை மக்கள் ஒரு பக்கம் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கமோ.. அவரின் பேச்சுக்கு இடையே.. மக்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்து கொண்டு இருந்தனர். அண்ணே.. விஜய் அண்ணே.. தலைவா தண்ணீர் கொடு என்று மக்களே கதறி கேட்கும் நிலைக்கு சூழல் போனது. விஜயும்.. ஆம்புலன்ஸ் வருது வழி விடுங்க.. தண்ணீர் கொடுங்க என்றெல்லாம் சொல்லியும் கூட தண்ணீர் கொடுக்கவும் அங்கே ஆள் இல்லை.. நிலைமையை கட்டுப்படுத்தவும் முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

விஜய் பேசும் போதே.. அங்கே மக்கள் மயங்கி மயங்கி விழ.. அவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பலர் அங்கேயே உயிருக்கு போராட.. விஜயின் பேச்சுக்கு இடையிலேயே அங்கே பலருக்கும் CPR கொடுக்கும் அவலம் ஏற்பட்டது. சூழ்நிலையை ஒருவகையில் உணர்ந்த விஜய்.. பேச்சை முடித்துவிட்டு திருச்சி விமான நிலையம் கிளம்ப.. மருத்துவமனையில் இருந்து முதல்கட்ட செய்திகள் வெளியாகின.

விஜய் வெளியேற துவங்கும் முன்பே.. 10 பேர் பலி என்ற செய்திகள் அரசு மருத்துவமனையில் இருந்து வந்தன.. தண்ணீர் இல்லாமல் மயங்கி விழுந்துள்ளனர்.. கூட்ட நெரிசலில் மிதிபட்டு பலருக்கு நெஞ்சு எலும்பே நசுங்கி உள்ளது.. பச்சிளம் குழந்தைகள் கூட மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடி சம்பவ இடத்திலேயே பலியாகி சடலமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

விஜய் திருச்சி விமான நிலையம் செல்லும் முன்பே.. கொத்து கொத்தாக உயிர்கள் பலியாக பலி எண்ணிக்கை 30 ஐ தாண்டியது. பலருக்கு நெஞ்சில் மிதி, குடலில் உணவு இல்லை.. தண்ணீர் இன்றி நாக்கு வறண்ட நிலை என்று ஒவ்வொரு உடல்களும் ஒரு கோர கதையை சொன்னது. அதிலும் மார்ச்சுவரியில் உடல்களை வைக்க கூட இடமின்றி குழந்தைகள் எல்லாம் ஒரு ஸ்ட்ரெச்சரிலும்.. வயதானவர்கள் ஒரு ஸ்ட்ரெச்சருக்கு இருவர் - மூவர் என்றும் குவித்து வைக்கப்பட்டு இருந்தனர்.

நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை உயர்ந்து.. 41 வரை பலி என்று அறிவிக்கப்பட்டது. விவரம் தெரிந்ததும் அருகிலேயே கட்சி அலுவலகத்தில் இருந்த திமுக மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு வர.. கரூர் - திருச்சி பைபாஸில் பயணித்துக்கொண்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வு இடத்திற்கு வர.. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. திமுக - அதிமுக தொண்டர்கள் பலர் மனித சங்கிலி அமைத்து.. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இன்னொரு பக்கம் விஜய் திருச்சியில் செய்தியாளர்களை சந்திக்காமல் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றது பலரின் இதயத்தை உலுக்கியது.

ஸ்டாலின் - விஜய் வீடியோ

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் அடுத்தடுத்த நாட்களில் பரவின. இதையடுத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், "கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி, நடக்கக்கூடாத துயரம். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.

செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை இழந்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி வருகிறோம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நடந்த சம்பவத்துக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன், என்று கூறினார்.

விஜய் வீடியோ

கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் வீடியோ வெளியிட்ட 2 நாட்களில் முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.

கரூர் விசாரணை

மொத்த பலி எண்ணிக்கை 41 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கி விசாரணைகளை மேற்கொண்டது. அக்டோபர் 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.ஐ.டி அமைத்தது. இதையடுத்து விசாரணை உடனே தொடங்கியது. கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவியதை அடுத்து இந்த விசாரணை கமிட்டி தீவிரம் காட்டியது.

இதற்கு இடையே சம்பவம் தொடர்பாக பரவிய வதந்திகள் காரணமாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேரடியாக உண்மைகளை மீடியா முன் விளக்கும் சூழலும் ஏற்பட்டது. தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது; 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர், என்று அமுதா ஐஏஎஸ் விளக்கம் கொடுத்தார்.

சட்டமும் கரூரும்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தவெக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது வழக்கு பதியப்பட்டு எப்ஐஆர் போடப்பட்டது. இருவரும் கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவானார். அவர்களுக்கு எதிரான ஜாமீன் வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு எங்கள் கூட்டத்தில் குண்டர்கள் நுழைந்துவிட்டனர். அந்த குண்டர்கள் மக்கள் மீது ஆயுதங்களை வைத்து தாக்கினர். சில குண்டர்கள் காலணிகளை தூக்கி விஜய் மீது எறிந்தனர். வேலுசாமிபுரம் ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், மனுதாரர்களின் கோரிக்கையை காவல்துறை நிராகரித்திருக்க வேண்டும் . தடியடி காரணமாக கூட்டம் கோபமடைந்ததாகவும், தடியடி ஏன் நடத்தப்பட்டது சந்தேகம் தருகிறது. கூட்டத்தில் ரசாயனம் எறியப்பட்டது.

நிகழ்வுக்கு ஒரு நாள் முன்புதான் காவல்துறை அனுமதி வழங்கப்பட்டது. நேரம் இருந்திருந்தால், டிவிகே மாற்று இடத்தில் அனுமதி பெற்றிருக்கும் என்று அவர் கூறுகிறார். காவல்துறை விதித்த ஒரு விதிமுறை கூட ஏற்பாட்டாளர்களால் மீறப்படவில்லை.

கன்னியாகுமரியில் நடைபெறும் உள்ளூர் திமுக கூட்டத்தில் ஏதேனும் விபத்து நடந்தால், திமுக பொதுச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யுமா. இதில் மனுதாரர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எந்த குற்றச்சாட்டையும் செய்யவில்லை. அவர்கள் மீது தவறே இல்லை என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளனர். ஆனால் இவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின் பரபரப்பு இன்னும் கூடியது.

சிபிஐ வழக்கு

இதையடுத்து கடந்த 13ம் தேதி கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 13ம் தேதி வெளியான இந்த தீர்ப்பிற்கு முன் த.வெ.க. தரப்பு வாதத்தில், கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார்.

பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. இதை பற்றி முறையாக விசாரிக்க நீதிபதி தலைமையிலான SIT தேவை. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும், என்று என்று வாதம் வைத்தனர். இதுவே வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சாதகமாக மாறிய நிலையில் வழக்கு தற்போது சிபிஐக்கு மாறி உள்ளது.

41 பேர் மரணத்திற்கு இன்னும் தவெக சார்பில் விஜய் நேரடியாக இரங்கலோ.. புகைப்படம் முன் இரங்கலோ தெரிவிக்காத நிலையில்.. இந்த மாபெரும் விபத்து.. மனித அவலம்.. உயிர்களின் இழப்பு என்பதை தாண்டி இப்போது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது இன்னும் பெரிய கொடூரம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+