ஸ்ரீதர் வேம்பு “தேசியவாதி”.. டைமிங்கில் சந்திப்பு வீடியோவை வெளியிட்டு பாராட்டிய அமர் பிரசாத் ரெட்டி
தமிழ்நாடு பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஸ்ரீதர் வேம்புவுடன் தான் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜோஹோ நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவியே புகார் அளித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் தமிழ்நாடு பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஜோஹோ என்ற உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நடத்தி வருகிறார். ஜோஹோ நிறுவனத்தின் கிளைகள் சென்னை உட்பட உலகின் பல இடங்களில் இவரது செயல்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களால் ஜோஹோ நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு வந்த ஸ்ரீதர் வேம்பு
பெரும் வளர்ச்சியின் காரணமாக சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்ப குழுமமாக ஜோஹோ வளர்ந்து நிற்கிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்தே பலரும் பணி செய்ய தொடங்கினர். அப்போது தமிழ்நாட்டிற்கு வந்த ஸ்ரீதர் வேம்புவும் கிராமத்தில் இருந்து தனது நிறுவனத்தை இயக்கத் தொடங்கினார்.

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்
இயற்கை சூழலுக்கு மத்தியில் இதுபோல் பணிபுரிவது அருமையாக இருப்பதாகவும் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதற்காக இவர் மீது பல்வேறு தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இவர் ஆர்.எஸ்.எஸ். அபிமானி என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

மனைவி குற்றச்சாட்டு
ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரீதர் வேம்பு பல்வேறு விசயங்கள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி அவர் மீது முன்வைத்துள்ள புகார் குறித்து இன்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். தன்னையும் தனது மகனையும் அமெரிக்காவிலேயே கைவிட்டுவிட்டு சென்றதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கலிபோர்னியாவில் விட்டுவிட்டார்
மத்தலம்பாறை கிராமத்தில் தங்கி இருக்கும் நிலையில் அவரது மனைவி பிரமிளா தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டில், "இந்தியாவில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே ஸ்ரீதர் வேம்பு எங்களை கலிபோர்னியாவில் விட்டுவிட்டு சென்றார். மீண்டும் அவர் கலிபோர்னியா வருவதை தவிர்த்துவிட்டார்." என்று தெரிவித்து இருக்கிறார்.

விவாகரத்து கோரினாரா?
2020 ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி பிரமிளாவை வாட்ஸ் அப்பில் அழைத்து விவாகரத்து கேட்டதாகவும், 2021 ஆம் ஆண்டு அதற்கான தகவல்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது பங்குகளை தனக்கு தெரியாமலேயே ஸ்ரீதர் வேம்பு மாற்றிவிட்டதாகவும் பிரமிளா குற்றம்சாட்டி உள்ளார்.

அமர் பிரசாத் ரெட்டியுடன் மீட்டிங்
இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்புவும் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். தனது மகன் ஆட்டிசத்தில் இருந்து மீள்வார் என்று நினைத்தே கிராமத்திற்கு வந்ததாகவும், இதை மனைவி தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கி உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, ஸ்ரீதர் வேம்புவுடன் தான் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "ஜோஹோ நிறுவனரும் தேசியவாதியுமான ஸ்ரீதர் வேம்பு ஜெம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications