ஆளுநர் சொல்றத அவர் வீட்டுல கூட கேட்க மாட்டாங்க.. அண்ணா சொன்னதுதான்.. போட்டுத்தாக்கிய டிடிவி தினகரன்!
சென்னை : ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள், அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்தும் என என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகி வருகிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
இந்நிலையில், ஆளுநர் விவகாரத்தில் ஓபிஎஸ் வெளிப்படையாக ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தினகரன் ஆளுநரை விமர்சித்துப் பேசியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மேம்படுத்தப்பட்ட அமமுக வலைதளத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதிமுக பற்றி பேச ஒன்றுமில்லை
அப்போது பேசிய டிடிவி தினகரன், அமமுகவின் வலைதளத்தை மேம்படுத்தியுள்ளோம். Ammk.com இணையதளம் மூலம் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார். அவரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக என்ற கட்சி இன்று செயல்படாத நிலையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக என்ற கட்சி பற்றி பேச எதுவும் இல்லை. யார் உண்மையான அதிமுக என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும்.

அணில் போல
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்க இருக்கும் தேர்தல். 2023 நவம்பர் டிசம்பரில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அமமுக அணில் போல் செயல்பட்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். திமுகவை எதிர்ப்பதற்காக வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைப்போம். திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். திமுக, காங்கிரஸ் கட்சியை கழற்றி விட வாய்ப்புள்ளது.

இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராமல்
10% இடஒதுக்கீடு விவகாரத்தைப் பொறுத்த வரையில் 69% இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். ஜெயலலிதா பெற்றுத் தந்த 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராமல் இருக்க அரசு பார்த்து கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சரிவர செயல்பட்டு மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசை குறை கூறுவதை விட இன்னும் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

ஜனநாயக விரோத நடவடிக்கை
உச்ச நீதிமன்றம், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்ததை வரவேற்கிறோம். நீண்ட காலமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது ஜனநாயக விரோதமான தவறான நடவடிக்கை. தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம். அனைத்து விஷயங்களிலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி என எதிர்த்துப் பேசுவது முறையானது அல்ல.

வீட்டில் கூட கேட்க மாட்டார்கள்
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்தும். ஆளுநர் சனாதனத்தை பற்றி பேச தேவையில்லை. ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தாலே இப்படித்தான் பேசுவார்களா என எனக்குத் தெரியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications