விசாரணைக்கு தடை விதித்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் - அன்பில் மகேஷ் வழக்கில் போலீஸ் பதில் மனு தாக்கல்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிரான விசாரணைக்கு தடை விதித்தால், பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். மேலும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் அன்பில் மகேஷ் தரப்பில் கூறும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஜூன் 27-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், விசாரணையில், கட்சி நிதி என்ற பெயரில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்றும், அரசுத் துறைச் செயலாளரின் ஒப்புதல் பெற்றே வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதை முடக்கும் வகையில் வழக்கை ரத்து செய்ய கோர முடியாது. வழக்கில் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போதுதான், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்கு குறித்து தீர்மானிக்க முடியும்.
தனியார் பள்ளிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை. தற்போதைய நிலையில், விசாரணைக்கு தடை விதித்தால், பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன. எனவே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முன்ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கூடுதலாக தங்கள் தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், "கடந்த திமுக ஆட்சியில் சுமார் 55 வழக்குகள் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. எல்லா வழக்குகளிலும் பொதுத்துறை செயலாளர் மட்டுமே அனுமதி அளித்துள்ளார்.
ஆட்சி மாறியவுடன் ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது ஏன்? தற்போது நிலை மாறியது ஏன்?" என கேள்வி எழுப்பினார். பின்னர், அன்பில் மகேஷ் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



Click it and Unblock the Notifications
