சுப்ரமணியன் சாமி எவ்ளோ பெரிய மனுஷன்.. அண்ணாமலை அவரையும் மதிக்கல! புதிய பஞ்சாயத்தை கிளப்பும் காயத்ரி
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுப்ரமணிய சாமியையும் மரியாதைக் குறைவாக இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருப்பதாக அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்து இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியே சுப்ரமணிய சாமியை மரியாதைக்குறைவாக பேசாதபோது அண்ணாமலை எப்படி பேசலாம் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நேற்று காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகியது குறித்தும், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதேபோன்று அண்ணாமலையின் விலை உயர்ந்த ரபேல் வாட்ச் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முறையாக பதிலளிக்காத அண்ணாமலை, செய்தியாளர்களின் ஊடகங்களின் பெயரை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம்
யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு வரக்கூடாது என்று தெரிவித்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களை பாஜகவினர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கமலாலயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்
இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை சென்னை பத்திரியாளர்கள் சங்கம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் என பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பத்திரிகையாளர்களை மிரட்டும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்ப்பு புறக்கணிக்க ஊடகங்களுக்கு யுஎம்பிசி அழைப்பு விடுத்தது.

காயத்ரி ரகுராம் கருத்து
இந்த நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், "இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் காயத்ரி ரகுராம் தொடர்பான கேள்விகளுக்கு அண்ணாமலையிடம் பதில் இல்லை. பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவது குறித்து அண்ணாமலையிடம் பதில் இல்லை. எனக்கு திமுகவை சேர்ந்தவருடன் தொடர்பு இருப்பதாக அண்ணாமலை மீண்டும் சொல்கிறார். அதை நிரூபிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

சுப்ரமணிய சாமியை விமர்சித்த அண்ணாமலை
இந்த நிலையில் அவர் ட்விட்டரில் மேலும் சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார். அதில், "இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுப்ரமணிய சாமி குறித்து அண்ணாமலை ஆணவத்துடனுடன், மரியாதை குறைவாகவும் பேசி இருக்கிறது. குறைந்தபட்சம் அவரது வயது மற்றும் அனுபவத்துக்காவது அண்ணாமலை நிச்சயம் மரியாதை கொடுத்து இருக்க வேண்டும்.

மோடியே சுப்ரமணிய சாமியை சாடியது இல்லை
கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அனைவரையும் அவமானப்படுத்துவதே அண்ணாமலையின் அரசியல். சுப்ரமணியன் சாமி ஒரு விமர்சகராக பிரதமர் நரேந்திர மோடியிடமே கேள்விகளை எழுப்பி இருக்கலாம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சுப்ரமணிய சாமியை ஒருபோதும் அவமதிக்கும் வகையில் பேசியது இல்லை." என்றார்.

பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி
பாஜகவை ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா, பாஜக மாநில சிறுபான்மை அணி செயலாளர் டெய்சியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து அதை விமர்சித்ததால் 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் காயத்ரி. அதை தொடர்ந்து துபாய் ஓட்டல் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த காயத்ரி கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications