தீபாவளி வசூல்..! தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு- சிக்கியது எவ்வளவு?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த 33 அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ. 18 லட்சம் கணக்கில் வராத ரொக்கப்பணம் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பணம் மற்றும் பொருட்கள் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, சேவியர் ராணி மற்றும் போலீசார் திருச்சி பிராட்டிரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை மாலை அதிரடியாக நுழைந்தனர்.

ரெய்டு
பின்னர் அங்கு உள்ள ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 புரோக்கர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

வட்ட வழங்கல் அலுவலகம்
இதேபோல் கரூர் ஜவகர்பஜார் சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் கரூர் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் ரூ.2,920-க்கு ரசீது போடப்பட்டுள்ள நிலையில், ரூ.190 மட்டுமே கையிருப்பில் இருந்துள்ளது. மீதமுள்ள ரூ.2,730 பற்றாக்குறையாக இருந்தது குறித்து அலுவலகத்தில் இருந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

1.39 லட்சம்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்பட 7 பேர் அடங்கிய போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை
உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 1.38லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். கன்னியாகுமுரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம், திருவண்ணாமலை வணிகவரித்துறை ஆணையாளர் அலுவலகம், திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

18 லட்சம் சிக்கியது
லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் மின்சாரம், போக்குவரத்து, தீயணைப்பு, பதிவுத்துறை, வணிகவரி, காவல்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட 14 அரசுத் துறைகளைச் சேர்ந்த 33 அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ.18,20,030 ரொக்கத்துடன் ரூ.6,47,180 மதிப்பிலான மதுபானங்கள், 36 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications