‛‛100’’ டாஸ்மாக்.. செந்தில் பாலாஜிக்கு திடீரென்று அண்ணாமலை விடுத்த சவால்.. உச்சக்கட்ட வார்த்தை போர்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக பாஜக அறிவித்த பந்த் தொடர்பாக அண்ணாமலையை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்தார். இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் கூறும் சவாலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்து வருகிறார்.
மின்வெட்டு விஷயம் தொடங்கி கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விஷயம் வரை இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி பேட்டி
இந்நிலையில் தான் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதன்பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார். பேசிய கூறியதாவது:

அரசியல் கோமாளி
கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.

எப்படி சொல்ல முடியும்
கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன்'' என்றார்.

அண்ணாமலை விமர்சனம்
இந்நிலையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், செந்தில் பாலாஜிக்கு சவால் விடுத்துள்ளார். இதுபற்றி அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‛‛சாராய அமைச்சருக்கு காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன். ‛‛எனக்கு தெரியாது. எனக்கு தெரியாமல் அறிவித்து விட்டார்கள்'' என்று நான் சொன்னதாக பொய்களை கட்டவிழ்த்து அவர் அதனை நிரூபிக்க வேண்டும்.

100 மதுக்கடைகளை மூட...
அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அதற்கு தண்டனையாக குறைந்தபட்சம் 100 மதுக்கடைகளாவது சாராய அமைச்சர் மூட வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும்'' என அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications