#Exclusive கிரவுண்டை ரெடி பண்றாங்க.. அண்ணாமலை கையில் சிக்கிடுச்சு.. கோலாகல ஸ்ரீநிவாஸ் ‘பரபர’!
சென்னை : ஜூலை மாதத்தில் நடந்த விவகாரத்தை இப்போது திடீரென பாஜக கிளப்புகிறது என்றால், இத்தனை நாட்களில் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இப்போது குற்றச்சாட்டை கிளப்புகிறார்கள். ஏதோ ஒரு விஷயத்துக்கு பாஜக களத்தை தயார் செய்கிறது என மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ஏதோ ஒன்றை பிளான் செய்திருக்கிறார். அதை டிஜிபியும் உணர்ந்திருப்பதால் தான் அண்ணாமலையின் பேச்சை அவர் பொருட்படுத்துகிறார் என்றும் கூறியுள்ளார் கோலாகல ஸ்ரீனிவாஸ்.
பிரதமர் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அற்ப அரசியல் செய்வதாக திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அண்ணாமலை ஏதோ ஆதாரங்களை திரட்டிவிட்டே குற்றம்சாட்டுகிறார், விரைவில் வெளியிடக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் கோலாகல ஸ்ரீனிவாஸ்.

அண்ணாமலை பகீர்
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருந்ததாகவும், பிரதமர் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், இந்த விஷயம் மத்திய புலனாய்வு ஏஜென்சி மூலம் தெரியவந்துள்ளது என்றும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாநில அரசின் பொறுப்பாளர்கள் மீது ஆளுநர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் கிளப்பினார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்த ஒரு அரசு துறையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனத் தெரிவித்தார்.

நெருப்பில்லாமல் புகையாது
இந்த விவகாரம் தமிழக அரசை களத்தை சூடாக்கியுள்ள நிலையில் இதுகுறித்து ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ். அப்போது அவர் பேசுகையில், "பிரதமர் மோடி தமிழகத்திற்கு பல முறை வந்திருக்கிறார். சரியாக ஜூலையில் நடந்த விவகாரத்தை இப்போது பாஜக கிளப்புகிறது, அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அண்ணாமலை சொல்கிறார். இதை ஆளுநர் அளவுக்கு கொண்டுபோய் புகாராகவும் கொடுக்கிறார் என்றால், 'நெருப்பில்லாமல் புகையாது' எனச் சொல்வதற்கு ஏற்ப ஏதோ ஒன்று இருக்கிறது.

டிஜிபி விளக்கம் - சந்தேகம்
அண்ணாமலையின் புகாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருக்கிறார். தரமான உபகரணங்களே பயன்படுத்தப்படுவதாக டிஜிபி சொல்லி இருக்கிறார். ஆனால், பிரதமர் பாதுகாப்பின்போது பயன்படுத்தப்பட்டது பற்றி குறிப்பாகச் சொல்லவில்லை. பிரதமர் பாதுகாப்பின் போது பயன்படுத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர் குறைபாடுகளோடு இருந்தது பற்றிய அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் போதுமானதாக இல்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொறுப்பு டிஜிபிக்கு உள்ளது.

கிரவுண்டை ரெடி செய்கிறது பாஜக
ஜூலை மாத இறுதியில் நடந்த விவகாரத்தை இப்போது திடீரென பாஜக கிளப்புகிறது என்றால், இத்தனை நாட்களில் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இப்போது குற்றச்சட்டை கிளப்புகிறார்கள். அப்படியென்றால் ஏதோ ஒரு விஷயத்துக்கு பாஜக களத்தை தயார் செய்கிறது என்று அர்த்தம். அண்ணாமலை ஏதோ ஒன்றை பிளான் செய்திருக்கிறார். அதை டிஜிபியும் உணர்ந்திருப்பதால் தான் அண்ணாமலையின் பேச்சை அவர் பொருட்படுத்துகிறார்.

டிஜிபி ஏன் பதில் சொல்கிறார்?
பிரதமர் அலுவலகமோ, உள்துறையோ, எஸ்.பி.ஜியோ, பிரதமர் பாதுகாப்பு குறைபாடு பற்றி எந்தக் குற்றச்சாட்டும் சொல்லாதபோது ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொல்லும் புகாருக்கு ஏன் காவல்துறையின் தலைவர் பதில் சொல்ல வேண்டும்? ஒரு கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு முதல்வரோ, கட்சியினரோ பதில் சொல்லலாமே? ஓர் அரசியல்வாதியின் புகாருக்கு ஏன் துறை தலைவர் பதில் சொல்கிறார்? துறை ரீதியான கேள்விகளுக்கு மட்டும் அவர் பதில் சொன்னால் போதுமே?

ஏதோ ஒரு சிக்கல்
பிரதமர் அலுவலகம், எஸ்பிஜி புகார் சொல்லாமல், அண்ணாமலை புகார் சொல்லுவதற்கு டிஜிபி பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்தை உணர்கிறார் என்றால் அங்கு ஏதோ சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். ஏதோ ஒன்று அண்ணாமலைக்கு தெரிந்திருக்கிறது என்று டிஜிபி உணர்ந்ததன் காரணமாக அவருக்கு பதில் சொல்கிறார். அண்ணாமலை ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்றால் ஏதோ ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். எப்போது இதை வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன்.

பாஜக திட்டம்
அதிமுக தலைவர்கள் பலரும் கூட தமிழக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் டிஜிபியோ, காவல்துறை அதிகாரிகளோ பதில் சொல்லவில்லை. ஆனால், இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் மட்டும் ஏன் டிஜிபியே வந்து பதில் சொல்கிறார்? அப்படி என்றால் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று பொருள். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு டிஜிபி ஏன் பதில் சொல்கிறார்? பிரதமர் பாதுகாப்பு குறைபாட்டை வைத்து பாஜக திட்டம் தீட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications