2011ல் காங்கிரஸிடம் சிக்கிய திமுக.. அதே பார்முலாவை கையிலெடுத்த பாஜக.. எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி இடம்பெற்றுள்ள பாஜக, சுமார் 50க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளன. 2011ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக தரப்பில் 63 தொகுதிகள் அளிக்கப்பட்டதை போல், இம்முறை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக பெற விரும்புவதாக பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதை மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்.

அதிமுக vs பாஜக
அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காத சூழலை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுவரை இரு கட்சிகளின் தலைவர்களும் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த கருத்தையும் கூறவில்லை.
50 தொகுதிகளில் போட்டி?
ஆனால் அரசியல் வட்டாரங்களில் பாஜக தரப்பில் 50க்கும் அதிகமாக இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்காகதான் அமித்ஷா தொடர்ச்சியாக தமிழ்நாடு பயணிப்பதாகவும், மாநில பாஜகவினர் தொடர் அரசியல் நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 234 தொகுதிகளில் சுமார் 50 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டால், அது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும்.
2011 திமுக கூட்டணி
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பாக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 124 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும், பாமக 30 தொகுதிகளிலும், விசிக 10 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இறுதி முடிவாக திமுக கூட்டணிக்கு வெறும் 31 எம்எல்ஏ-க்கள் கூட கிடைக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால், அந்த கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாஜகவின் நிலவரம்
தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக, தமாகா, அமமுக, ஓபிஎஸ், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பும் கூட்டணியாக போட்டியிட்டு சுமார் 18% வாக்குகளை பெற்றன.
தயாராகி வரும் பாஜக
இதனை பாஜக தனது வாக்கு வங்கியாக கூறி வருகிறது. ஆனால் பெரும்பான்மை வாக்குகளை ஓபிஎஸ், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், பாமக வேட்பாளர்களே பெற்றனர். பாஜக 21 தொகுதிகளில் போட்டி 5 தொகுதிகளில் மட்டுமே 2வது இடத்தை பிடித்தது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. அதற்கேற்ப மதுரை, நெல்லை, கோவை, தென்காசி, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை குறி வைத்து பாஜக பணியாற்றி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முடிவு?
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எப்படி அதிக தொகுதிகளை பெற்றதோ, அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகிறது. ஒருவேளை பாஜக 50க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டால், எந்த கட்சிக்கு லாபம், எந்த கட்சிக்கு நஷ்டம் என்பதை தேர்தல் முடிவை பொறுத்தே தெரிய வரும். பாஜகவின் இந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா என்பதும் இன்னும் சில மாதங்களில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications