டெல்லிக்கு போன ‘டேட்டா’.. எல்லா கணக்கும் இங்க ஆரம்பிச்சது.. டிடிவி தினகரனுக்கு முக்கிய ‘அஜெண்டா’!
சென்னை : டிடிவி தினகரனின் ஒவ்வொரு பேச்சுக்கும், செயலுக்கும் பின்னணியில் பாஜகவின் கை வலுவாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பாஜக தலைமையின் வழிகாட்டல்படியே, டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைவது பற்றி தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் என்கிறார்கள்.
திமுகவுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பதற்கு நாங்கள் எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவுக்கு நெருக்கமானவர்களாகச் செயல்பட்டு வந்த போதெல்லாம் கூட டிடிவி தினகரன், பாஜகவை விமர்சித்தே பேசி வந்தார்.
ஆனால், இப்போது முழுமையாக பாஜக ஆதரவு எண்ணத்துடனே தினகரன் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் சர்ச்சை உள்ளிட்ட திமுக எதிர்க்கும் விவகாரங்களில் எல்லாம் பாஜகவின் குரலையே ஒலித்து வருகிறார் தினகரன்.

ரசிக்காத பாஜக
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவு, 2024 தேர்தலில் தங்களுக்கும் பாதகமாக அமையும் என்பதை உணர்ந்துள்ள பாஜக, ஒன்றுபட்ட அதிமுகவே தங்கள் விருப்பம் என தெளிவாகவே சமிக்ஞை காட்டிவிட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலை டெல்லி பாஜக விரும்பவில்லை என்பதன் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தங்களை தனியாகச் சந்திக்க விரும்புவதை முடிந்தளவுக்கு தவிர்த்தது டெல்லி தலைமை. பாஜகவின் விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டார். ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் சமரச முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இறங்கி வரத் தயாராக இல்லை.

சாஃப்ட் டோனில் டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி பேச்சை எடுத்தாலே கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் கூட, திடீரென சமாதானக் கொடி பறக்கவிட்டார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி என ஈபிஎஸ்ஸை குறிப்பிட்டுப் பேசியது, அவருக்கும் எனக்கும் எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை எனப் பேசியது என அனைத்தும் இணக்கத்திற்கான அச்சாரமாகவே கருதப்பட்டது. சசிகலாவும், ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருக்கும் சில முக்கியப் புள்ளிகள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு, தனது எண்ணத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனாலும் ஈபிஎஸ் மனம் மாறவில்லை.

அமித்ஷா கொடுத்த அறிவுரை
சமீபத்தில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்த போது கூட நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியில் குழப்பம் நிலவுவது நல்லதல்ல, ஏற்கனவே டிடிவி தினகரன் கடந்த தேர்தல்களில் அதிமுக வாக்குகளைப் பிரித்துள்ளார். இனியும் அது தொடர்ந்தால் சிக்கல் தான், 2024 தேர்தலில் சிறிய கட்சிகளைக் கூட விட்டுவிடாமல் ஆதரவைப் பெற வேண்டும். இருக்கும் கூட்டணி கட்சிகளை தவறவிடக்கூடாது, தேர்தலை மனதில் வைத்து செயல்படுங்கள், அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என அமித்ஷா எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ் செய்ததாக கூறப்பட்டது.

பாஜக ஆதரவு
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜக சொல்படி நடந்த காலங்களில் எல்லாம், பாஜகவை கடுமையாக விமர்சித்த தினகரன் இப்போது அப்படியே புரோ பிஜேபி ஸ்டாண்ட் எடுத்துவிட்டார். பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் குரலையே எதிரொலித்து வருகிறார் தினகரன். உதாரணத்திற்கு, சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளித்த நிலையில், திமுக அரசுக்கு மூக்கணாங்கயிறாக இருக்கிறார் ஆளுநர் என ஆளுநருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் தினகரன்.

பாஜகவுக்கு சப்போர்ட்டா பேசல
இந்த விவகாரம் மட்டுமல்ல, சமீபமாக பாஜக தொடர்பான எல்லா பிரச்சனைகளிலுமே பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையே உதிர்த்து வருகிறார் டிடிவி தினகரன். குறிப்பாக, தினகரன் பாஜக ஆதரவு கருத்துகளைச் சொல்லும் போதெல்லாம், ‘பாஜகவுக்கு ஆதரவா நான் பேசல' எனக் கூறிக்கொண்டே பாஜக ஆதரவு கருத்துகளைச் சொல்லி வருகிறார் தினகரன். மேலும், அதிமுகவுடன் கூட்டணிவைக்கத் தயார் எனவும் வெளிப்படையாகவே பேசினார். இது அனைத்துமே, பாஜக தலைமை உறுதியளித்த பிறகு நடப்பதுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜகவுக்கு கிடைத்த டேட்டா
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அமமுக பிரித்த வாக்குகள், அதிமுகவுக்கு எந்தளவுக்கு சிக்கலைக் கொண்டு வந்தது எனும் டேட்டாவை பாஜக தலைமை பெற்றதாம். தென் மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில், அதிமுகவின் வெற்றி சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பறிபோனதற்கும் அமமுக வாங்கிய ஓட்டுகளே காரணம், அமமுக பெற்ற வாக்குகள் அனைத்துமே அதிமுக கூட்டணிக்கு வந்திருக்க வேண்டியவை என்பதையும் தமிழகத்தில் இருந்து சென்ற ரிப்போர்ட் மூலம் அறிந்துள்ளது பாஜக தலைமை.

தினகரனுடன் பேச்சு
இதையடுத்தே, டிடிவி தினகரனை கட்டாயம் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பாஜக தலைமை விரும்பியதாம். ஒருவேளை அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் ஏற்படவில்லை என்றாலும் தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலையில் தான் பாஜக ஈடுபட்டிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள எந்தவொரு வாக்கையும் பாஜக இழக்க விரும்பவில்லை, எல்லா மாநிலத்திலும் அதிகமான இடங்களைப் பெறவேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்கு, அந்த கணக்கின்படியே, பாஜக தலைமை, தினகரனையும் அணுகியது என்கிறார்கள். அதன்பிறகு தான் தினகரன் வெளிப்படையாக, அதிமுக கூட்டணியில் இணைவது பற்றி பேசத் தொடங்கினாராம்.

நான் சொன்னதை கேட்கலையே
அதன்படியே, திடீரென நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என கட்சிக் கூட்டத்தில் அறிவித்தார் டிடிவி தினகரன். 2021 தேர்தலிலேயே,பாஜக-வின் அழைப்பின் பேரில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க தினகரன் தயாராக இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. அதை உறுதிசெய்யும் வகையில் பேசிவரும் தினகரன், 2021லேயே எனது விருப்பத்தைச் சொன்னேன், எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை, அதனால்தான் ஆட்சி பறிபோனது எனப் பேசி வருகிறார்.

ஒன்றிணைக்கும் அஜெண்டா
பாஜக தலைமை 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில் தான், திமுகவை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்கத் தயார். திமுகவை வீழ்த்தும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டுவோம், கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும் என ஒன்றிணைந்த அதிமுக அணியை உருவாக்கும் அஜெண்டாவோடு பேசி வருகிறார் தினகரன் என்கிறார்கள்.

கணக்கு தப்பாது
பாஜக தலைமை, ஓபிஎஸ் + ஈபிஎஸ், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணையும் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்தக் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. டெல்லியின் கணக்குப்படி வரும் காலங்களில் இந்த கூட்டணி ஒன்றிணைவதற்கான வேலைகள் படிப்படியாகத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகித்தாலும் எடப்பாடி பழனிசாமியால், தங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகள் தொடர்பாக முடிவெடுக்கக் கூட முடியாது, அதை டெல்லி பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications