அதெப்படி திமுக ஆட்சியில் மட்டும் மின்தடை? நிலக்கரி தட்டுப்பாடு சுத்தப் பொய்..! பாஜக அண்ணாமலை காட்டம்
சென்னை : செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக எனவும், 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல் , கடலூர், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் திடீர் மின்தடை ஏற்பட்டது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் இந்த மின் தடை மக்களை பரிதவிக்க வைத்தது.

திடீர் மின் தடை
பலர் இருளில் தவித்ததோடு, இரவு தூங்க முடியாமல் புழுக்கத்தில் தவித்ததோடு, இரவில் இயங்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சினைகள் எழுந்தது. மேலும், இதே நிலைதான் நேற்றும் இன்றும் நீடித்தது. இதனையடுத்து, இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான மக்கள் மின்சார அலுவலர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மின்சாரம் எப்போது வரும் என கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

மக்கள் புகார்
மேலும் பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் மின்சார வாரிய அதிகாரிகள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டு மின்வெட்டு குறித்து புகார்களை பதிவு செய்தனர். வெற்றிக்கான காரணம் என்ன மின்சாரம் எப்போது தடையின்றி வழங்கப்படும் என அடுத்தடுத்த கேள்விகள் எழுப்பினார். இதனையடுத்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் மின் தடைக்கான காரணம் குறித்து பதிவிட்டார்.

திடீர் மின்பற்றாக்குறை
அதில்," மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரக பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." என பதிவிட்டிருந்தார்.

பாஜக அண்ணாமலை
இந்நிலையில் செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.

முதல்வர் விளக்குவார் ?
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதனால் மின் விநியோகம் தடைப்பட்டதாக தங்களது குடும்ப நாளிதழின் மூலம் கூறுவது சுத்தப் பொய். TTPSஇல் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று 5 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருந்தது; பற்றாக்குறை எங்கே? ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஒரே நாளில் 4 யூனிட்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டது. ஆலையை 5 நாட்களுக்கு இயக்க போதுமான நிலக்கரி கையிருப்பிலிருந்த நிலையில், TTPSல் உள்ள 3 யூனிட்கள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டதன் காரணத்தை முதல்வர் விளக்குவார் என்று நம்புவோமாக." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications