காங்கிரஸை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று பாஜக ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்மணிப்பூர் எம்பியும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது பல்கலைக்கழக மாணவிகள் 11 பேர் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். அவரை நிர்வாகம் பதவி நீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயலை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பாஜக போராட்டம் நடத்தும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிதுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக நாடகம் நடத்தி வரும் வேளையில், தனது கட்சியை சேர்ந்த உள்மணிப்பூர் எம்.பி.யும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது பல்கலைக்கழக மாணவிகள் 11 பேர் பாலியல் தொல்லை புகார் அளித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் மௌனம் காத்து வருகிறது. பல்கலைக்கழக உள்விவகார கமிட்டி இதனை விசாரித்து, அவரை பதவி நீக்கம் செய்துள்ளதுடன், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. பெண்ணுரிமை பேணாத காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, காங்கிரசின் ஓரவஞ்சனைகளை கண்டிக்கும் பதாகைகள் ஏந்தி இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
முன்னதாக நயினார் நாகேந்திரன் நேற்று காலையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "ராகுல் காந்தியின் பொய்ப் பிரச்சாரங்களையும் அவதூறுகளையும் தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்!
சென்னையில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு என்ற பெயரிலான அரசியல் மேடையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் கற்பனையான குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசியுள்ளார். தமிழக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் திரு. ராகுல் காந்தியின் ஒவ்வொரு பொய்ப் பிரச்சாரத்திற்கும் வரலாற்று உண்மைகளும் புள்ளிவிவரங்களுமே தகுந்த பதிலடியாக அமையும்.
முதலாவதாக, நீட் விவகாரத்தில் திரு. ராகுல் காந்தி பேசுவது அப்பட்டமான அரசியல் போலித்தனம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் (UPA) ஆட்சியில்தான் 2010-ல் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவரின் மனைவிதான் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார். அன்று நீட்டை அறிமுகப்படுத்திவிட்டு, இன்று அதற்கு எதிராகப் பேசி கையெழுத்திடுவது திரு. ராகுல் காந்தியின் அப்பட்டமான இரட்டை வேடம்! அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த 7.5% உள்ஒதுக்கீட்டால், இன்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகி வருகின்றனர்.
1960-களில் தமிழகத்தில் இந்தியைத் திணித்ததோடு, அதை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காங்கிரஸ், இன்று மொழிப்பற்று நாடகமாடுவது அப்பட்டமான ஏமாற்று வேலை! மாறாக, தமிழின் பெருமையை ஐ.நா. வரை முழங்கி, புதிய நாடாளுமன்றத்தில் 'செங்கோலை' நிறுவி, 'காசி தமிழ் சங்கமம்' நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். மேலும், தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி வழிக் கல்விக்கே முழு முன்னுரிமை அளித்திருப்பது பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசுதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
இறுதியாக, ஜனநாயகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் திரு. ராகுல் காந்தி பேசுவது நகைப்புக்குரியது. நாட்டில் அவசரநிலையை (Emergency) பிரகடனம் செய்து ஜனநாயகத்தை நசுக்கிய வரலாற்றைக் கொண்ட காங்கிரஸுக்கு, ஜனநாயகம் பற்றிப் பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. மேலும், தனது இறுதிப் பேருரையில் "காங்கிரசை ஒழிப்பதே எனது முதல் வேலை" என முழங்கியிருக்கும் பெரியாரை, தேர்தல் வாக்குகளுக்காக இன்று காங்கிரஸ் துணைக்கு அழைப்பதுதான் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்! ராகுல் காந்தியின் இந்த வெற்று நாடகங்களை விழிப்புணர்வு கொண்ட தமிழக இளைஞர்களும், மாணவர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!" இவ்வாறு கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
