ஓய்ந்தது பிரச்சாரம்.. விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை.. செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாள் வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரச்சாரம் தீவிரமடைந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

ஓய்ந்தது பிரச்சாரம்
நாளை மறுதினம் அதாவது 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், பாஜக அண்ணாமலை, மநீம கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மின்னணு ஊடங்கங்களிலும் தடை
இதேபோல மின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது, தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சிகள், வானொலிகள், பண்பலை எனப்படும் எப்எம், வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும், தொலைபேசி உள்ளிட்டவை வாயிலாக பிரச்சாரம் செய்யக் கூடாது. மேலும் இசை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது.

வெளியூர் ஆட்களுக்கு தடை
வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை 7 மணிக்கு மேல் அந்தந்த வார்டு பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். கடந்த தேர்தல்களைப் போலவே திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடம்,தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியூர் ஆட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர் உள்ளிட்டவர்களுக்கு வணங்கப்பட்ட வாகன அனுமதிகள் இரவு 7 மணிக்கு மேல் செல்லாது என்பதால் அவர்களும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உலாவ தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்துவர வேட்பாளர் அல்லது அவரது சார்பாக யாருக்கும் வாடகைக்குக் வாகனங்களை அமர்த்த அனுமதி இல்லை. வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை வேட்பாளர்களின் அரசியல் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் வாக்குச் சாவடியை சுற்றியுள்ள 200 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது போன்ற விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறைக்கும், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications