Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை யாரு தப்பா பேசுறது? கண்கள் சிவந்த ராகுல் காந்தி.. முதுகில் குத்துகிறதா காங்கிரஸ்? இது எப்போ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு பலமே அதன் கூட்டணி கட்சிகள்தான்.. எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதும் இந்த பலமான கூட்டணியேதான்.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான தகவல் கசிந்து வருகிறது.

மாநில தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதிலிருந்தே, செல்வப்பெருந்தகையின் அரசியல் வேகம் எடுத்துள்ளது.. காங்கிரஸ் கட்சியை கட்டமைத்து தூக்கி நிறுத்த போவதாக மாவட்டம் வாரியாக சொல்லி வருகிறார்.

DMK Tamil Nadu Congress Selvaperunthagai

தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் இது தொடர்பாக செல்வப்பெருந்தகை பேசிவரும் பேச்சுக்கள், தமிழக காங்கிரஸுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்து வருகிறது. அதேசமயம், திமுகவுக்கு அவ்வப்போது அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

தொண்டர்கள்: லோக்சபா தேர்தலுக்கு முன்பு தொண்டர்களிடம் செல்வப்பெருந்தகை பேசும்போது, "கடந்த 57 வருஷமாக நாம ஏமாந்ததெல்லாம் போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வளர வேண்டும்.. இதோ, வீணாக பதவியை பெற்று பலர் வீட்டில் தூங்குகிறார்கள். இன்று கொடி பிடிக்க கூட தயங்குகிறார்கள்.. இருப்பது கொஞ்சம் பேர்தான். அதற்குள் இத்தனை கோஷ்டிகளா? அவமானமாக இருக்கு..

எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம், "எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள்" என்று கையேந்தி நிற்பது? நாம் சீட்டுக்காக கையேந்தும் நிலையில் இருப்பதை பார்த்து ராகுல் ரொம்பவே கவலைப்பட்டார்.. தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலுள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். தமிழகத்தில் முதன்மை கட்சியாக, காங்கிரஸ் வர வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை கேட்டதை திமுக உற்று கவனிக்கவே செய்தது.

செல்வப்பெருந்தகை: செல்வப்பெருந்தகையின் இத்தகைய பேச்சுக்கள் பெரும் சலசலப்பையும், நிறைய சந்தேகங்களையும் அப்போதே உண்டுபண்ணியது.. இன்னொரு கட்சியிடம் கையேந்தும் நிலைமை என்றால், செல்வப்பெருந்தகை யாரை சொல்கிறார்? திமுகவையா? தமிழகத்தை காங்கிரஸ் ஆள வேண்டும் என்றால், திமுக என்னாகும்? என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விவாதங்களும் வெடித்தன.

இதற்கு பிறகு, இந்த சந்தேகங்களையெல்லாம் செய்தியாளர்கள், செல்வப்பெருந்தகையிடமே நேரடியாக கேட்டார்கள்.. அதற்கு செல்வப்பெருந்தகை, "தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட, நாங்கள் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லையே? இது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. 57 ஆண்டாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கும்போது, இப்போது அந்த அந்த முயற்சியை மறுபடியும் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

கட்டமைப்பு: எங்கள் கட்சியை நாங்கள் வலிமைப்படுத்தினால், தோழமை கட்சிகள்தான் வலிமை பெறும். எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது எங்களின் ஜீவாதார உரிமை.. கட்சியின் கட்டமைப்பை சரிசெய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் செய்கிறோம்.. கட்சியை வலிமைப்படுத்துவது வேறு, தோழமை என்பது வேறு. இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கக்கூடாது.. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை நிறுவுவோம் " என்று கூறியிருந்தார்.

செல்வப்பெருந்தகை இப்படியொரு விளக்கம் தந்தபிறகும், சலசலப்புகள் இன்னமும் கூட்டணிக்குள் அடங்கவில்லை.. அதற்குள் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு பரபரப்பை தந்துவிட்டது. கார்த்தி சிதம்பரத்தை போலவே, மேலும் சில காங்கிரஸ் நிர்வாகிகளும் இதே போல, கருத்து தெரிவித்து வரும்நிலையில், இந்த விஷயமெல்லாம் டெல்லி வரை சென்றுவிட்டது.

காரசார பேச்சு: திமுக கூட்டணியில் காங்கிரஸ் வலிமையுடன் திகழ்ந்து வரும்நிலையில், அதிலும் திமுக மேலிடத்துடன், ராகுல் காந்தி நெருக்கமாகவும், இணக்கமாகவும் உள்ள நிலையில், தமிழக தலைவர்களின் பேச்சுக்களால் டெல்லி அதிர்ந்துள்ளதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமாரிடம், கட்சித்தலைமை இது தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறதாம்.. யாரெல்லாம் திமுகவிற்கு எதிராக பேசினார்களோ அவர்கள் எல்லாரிடமும் விளக்கம் பெற்று அறிக்கை அளிக்க காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாம்..

லிஸ்ட் எடுங்கள்: அதுமட்டுமல்ல, இதுபோன்ற விமர்சன பேச்சுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எழுந்ததா அல்லது தேர்தலுக்கு பின்பு எழுந்ததா, எந்தெந்த நிர்வாகிகள் இதுபோன்ற விமர்சனங்களை எழுப்புகின்றனர்? இப்படி அவர்கள் பேசுவதற்கு என்ன காரணம் என்றெல்லாம் மேலிட தலைவர்கள் எழுப்பியிருக்கிறார்களாம்? 2026 தேர்தலிலும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ள நிலையில், இதுபோன்ற பேச்சுக்கள், விமர்சனங்கள், தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் என்று மேலிடம் நினைக்கிறதாம்.

அதனால்தான் திமுகவுக்கு எதிராக பேசும் நிர்வாகிகளின் பெயரை லிஸ்ட் எடுக்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி: தமிழகத்தை பொறுத்தவரை, 2004, 2009, 2019, 2024 என 4 லோக்சபா தேர்தல்களிலும், 2006, 2011, 2016, 2021 என 4 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுக - காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டிருக்கின்றன. அதாவது 2014 லோக்சபாவில் மட்டும் தனித்தனியாக களமிறங்கின. சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு இன்றுவரை அபரிமிதமாக கிடைத்துவர காங்கிரஸ் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்து வருவதை மறுக்க முடியாது.

ஆனால், தேசிய அளவிலும்சரி, தமிழகத்திலும்சரி, திமுகவின் ஆதரவு காங்கிரஸுக்கு அவசியமாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில்கூட, காங்கிரஸுக்கு இத்தனை சீட் தர வேண்டுமா? அதிலிருந்து கமலுக்கு ஒரு சீட் தந்திருக்கலாமே? என்றுகூட முணுமுணுப்புகள் எழுந்து அடங்கின.

தனித்து போட்டி: ஆக மொத்தம், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவில்தான் காங்கிரஸ் நிற்க முடியும் என்ற நிலைமை உருவாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.. அதுவும் இல்லாமல், இதுவரை பொறுப்பிலிருந்த எந்த தலைவர்களும், "தனித்து போட்டி" என்ற ரிஸ்க்கை தேர்தலின்போது எடுக்கவில்லை... அப்படியிருக்கும்போது, எதற்காக திமுக மேலிடத்தை கடுப்பாக்கும்படி, தமிழக காங்கிரஸ் கருத்துக்களை உதிர்க்க வேண்டும்? என்று சோஷியல் மீடியாவில் கேள்விகளும் வலம்வர துவங்கியிருக்கின்றன.

தேசிய கட்சியாக இருந்துகொண்டு, எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? முடிந்தால் தனித்து போட்டியிடுங்களேன்? என்றும் கமெண்ட்கள் வலம்வருகின்றன..

அந்தவகையில், தமிழத்தில் திமுகவிற்கு எதிராக பேசிய காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விளக்கம் பெற்று அறிக்கை அளிக்குமாறு, மேலிட பொறுப்பாளருக்கு காங்கிரஸ் தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது, மிகவும் சலசலப்பை அரசியல் களத்தில் கூட்டி வருகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+