அரசியல் பழிவாங்கல்? அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு! மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியிருந்தனர். இந்நிலையில் அன்பில் மகேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னா் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்த்துதல் DTCP/CMDA அனுமதிகள் போன்ற அரசு சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறி பல பள்ளி நிர்வாகங்களிடம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஏமாற்றியதாக புகார்கள் பல வந்தன. இந்த புகாரின் அடிப்படையில்தான் ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

177 பள்ளிகளிடம் வசூல்
இதுவரை 177 பள்ளிகளிடம் அங்கீகாரம் வழங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பி.டி.அரசகுமாரின் 20 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் திருச்சியிலுள்ள இடங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற காவல்
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தா உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu-இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி B.T.அரசகுமார், வ/59, சாலிகிராமம், சென்னை என்பவரை 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசு ஆவணங்கள்
இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலுவலகங்களைச் சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்களும் விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வங்கி கணக்குகள்
இதுவரை, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. மேலும் புகார்கள் தொடர்நது பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் ரெய்டு
இவற்றில் A1 அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் A2 முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இவர்களது குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர் விசாரணை
மேற்கண்ட சோதனைகளின்போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள்/பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல்/மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
4 இடங்களில் ரெய்டு
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள். ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சி 2 இடங்களிலும் இன்று (16.09.2026) காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டாலின் கண்டனம்
ரெய்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
- தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
- பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
- நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
- ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
- இராமநாதபுரம் இரட்டைக் கொலை,
- சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,
- அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்
- என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
