சென்னையில் ஆசிரியர்கள் கையில் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.. அடுத்து ட்விஸ்ட்.. ஸ்தம்பித்த மருத்துவமனை
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டு நேரடி தேர்வு நடத்தி தேர்வு செய்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட 200 ஆசிரியர்களுக்கும் ரிப்பன் கட்டிடத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதேநேரம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றுக்கொண்டு உடனே பணியில் சேரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் பெற ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியைகள் குவிந்ததால் மருத்துவமனை ஸ்தம்பித்து போனது.
தமிழ்நாடு அரசு 2023-ம் ஆண்டு நேரடி தேர்வு நடத்தி 2,500 பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்தது. ஆனால், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்க வேண்டிய 2% இட ஒதுக்கீட்டை வழங்காமல் இந்த நியமனம் நடைபெறுவதாகக் கூறி, சில பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு தனி நீதிபதி இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார்.

இந்தத் தடையை எதிர்த்து, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, பல மாதங்களாகப் பணி நியமனத்திற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை தந்தது.
இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட 200 ஆசிரியர்களுக்கும் ரிப்பன் கட்டிடத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் பெற்றுக்கொண்டு பணியில் சேரலாம் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால் பணி நியமன ஆணை வழங்கிய பிறகு ஆண்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், பெண்கள், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையிலும் உடற்தகுதி சான்றிதழ் பெற்று கொண்டு உடனடியாக பணியில் சேர வேண்டும் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் திடீரென உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஆண்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் உடனடியாக சான்றிதழ்களை பெற்று பணியில் சேர்ந்து விட்டார்கள். ஆனால் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அத்துடன் சேப்பாக்கத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கு 50 பேருக்குதான் உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. ஆனால் ஒரே நேரத்தில் கர்ப்பிணி பட்டதாரி ஆசிரியைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உடல் தகுதி சான்றிதழ் பெற குவிந்ததால் மருத்துவமனை நிர்வாகம் திணறியது. அனைவரையும் இன்று வருமாறு திருப்பி அனுப்பினர்.
உடற்தகுதி சான்றிதழ் இல்லாமல் பணியில் சேர முடியாது என்பதால் பட்டதாரி ஆசிரியைகள் வேதனை அடைந்தார்கள். இதனால் அவர்கள் இயக்குனர் மகாலெட்சுமி அலுவலகம் முன்பு திரண்டு தங்களுக்கு உடல் தகுதி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாநகராட்சி கல்வி அதிகாரிகள், மாவட்ட அரசு மருத்துவமனையில் வாங்கிய உடற்தகுதி சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் காண்பித்து பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்.
பின்னர் நாங்கள் அழைக்கும்போது மருத்துவமனையில் உடல் தகுதி சான்றிதழ்களை பெற்று கொள்ளுங்கள் என்றனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆசிரியைகள் கலைந்து சென்றார்கள். மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் திடீரென மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் உடற்தகுதி சான்றிதழ் பெற வேண்டும் அறிவுறுத்தியதுதான் இந்த சிக்கலுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications