ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுகவுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையா? அன்பில் வழக்கில் நீதிபதி சரமாரி
சென்னை: ஆளுநரின் அதிகாரம் குறித்து திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன்தானே ஒப்பிட்டீர்கள் என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷுக்கு சொந்தமான 9 இடங்களில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் (CCB)செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டது.
7 மணி நேரம் விசாரணை
அதன்படி அன்பில் மகேஷ் சிசிபியிடம் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ரத்து செய்யக் கோரிக்கை
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அன்பில் மகேஷ் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
வழக்கு விசாரணை
எனினும் வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 12 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கே ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 12) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில், "ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால் என் மீதான சிசிபி வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதம் வைக்கப்பட்டது.
நீதிபதி சரமாரி கேள்வி
அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், "ஆளுநரின் அதிகாரம் குறித்து திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆட்டுத்தாடியுடன்தானே ஆளுநர் பதவியை திமுக ஒப்பிடும்? ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையற்றது என ஒப்பிட்டு பேசிய அதே நிலையில் தற்போதும் திமுக இருக்கிறதா?
தேவையில்லாத ஆளுநர் பதவிதானே?
திமுகவை பொருத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாததுதானே? என சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர், "அன்பில் மகேஷ் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நாளை மனுதாக்கல் செய்யவுள்ளார்" என தெரிவித்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
அப்போது நீதிபதி லட்சுமி நாராயணன், "அப்படியென்றால் முன்ஜாமீன் வழக்கு முடிவடையும் வரை, வழக்கை ரத்து செய்யக் கோரிய இந்த மனு மீது நான் உத்தரவையும் பிறப்பிக்க முடியாது" என கூறி இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



Click it and Unblock the Notifications
