வேகமெடுக்கும் சென்னை ஐஐடி தலித் மாணவி பாலியல் வழக்கு... சிறப்பு விசாரணை அதிகாரி நியமனம்
சென்னை: ஐஐடியில் 2020 ஆம் ஆண்டு பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியனை சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்துள்ளார்.
அவரை 3 மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் துறை சார்ந்த பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகாரளித்துள்ளார்.

அவமானப்படுத்திய பேராசிரியர்
புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத பேராசிரியர் பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவியை சாதி ரீதியாக அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவர்கள், தங்களை தட்டிக்கேட்க யாருமில்லை என்று அறிந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றனர்.

ஐஐடி நிர்வாகம் மெத்தனம்
தொடர் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஐஐடி புகார் கமிட்டியிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த ஐஐடி நிர்வாகம், மாணவியின் புகாரில் உண்மை இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி
பேராசிரியரிடமும், ஐஐடி புகார் கமிட்டியிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனம் உடைந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்திடமும், மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்து இருக்கிறார் மாணவி. அங்கு சென்றும் மாணவியை கொடுமைபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாதர் சங்கம் புகார்
இறுதியாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் புகாரளித்திருக்கிறார் மாணவி. இதனை விசாரித்து மாதர் சங்கத்தினர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாணவி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். 10 மாதங்களுக்கு மேலாக வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேற்கு வங்க மாணவர் கைது
மாதர் சங்கத்தின் குற்றச்சாட்டை அடுத்து இந்த விவகாரம் பூதாகரம் எடுத்தது. இந்த வழக்கை கையில் எடுத்த சென்னை காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களை கைது செய்ய மேற்கு வங்கம் விரைந்தனர். அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்த 30 வயதான கொல்கத்தாவைசேர்ந்த முன்னாள் மாணவர் கிங்ஸ் தேப்சர்மாவை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்து துறைமுகம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணை அதிகாரி நியமனம்
இதனிடையே ஐஐடி மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரியை தமிழ்நாடு காவல்துறை நியமனம் செய்துள்ளது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும் தமிழ்நாடு போலீஸ் தெரிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications