யாருப்பா இந்த அந்தோனிசாமி.. அதிசயித்துப் போன சென்னை மக்கள்.. நேரில் அழைத்து பாராட்டிய மேயர் பிரியா!
சென்னை: சென்னையில் குப்பையில் தவறவிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.
சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் உள்ள வின்செண்ட் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் தனது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை குப்பையுடன் சேர்த்து, மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் உர்பேசர் ஸ்மித் நிறுவன குப்பை சேகரிக்கும் வாகனத்தில் கொட்டி உள்ளார்.

அதன் பின்னர் வீட்டில் நகையைத் தேடியபோது நகை மாயமானது தெரியவந்துள்ளது. குப்பையுடன் சேர்த்து நகை கொட்டப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ் உடனடியாக அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் அந்தோனிசாமியிடம் உதவி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் நிறுவனத்தின் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் அந்தோணி சாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் சோதனை நடத்தினார்.
அப்போது குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லஸை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். தொலைந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வைர நகை மீண்டும் கிடைத்தது அதன் உரிமையாளருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் மற்றும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
ரூ. 5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை கண்டுபிடித்து உரிமையாளரிடம் சேர்ப்பித்த தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமிக்கு பொதுமக்கள், நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், குப்பை வாகன ஓட்டுநர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உர்பேசர் நிறுவன மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், திட்ட மேற்பார்வையாளர் குருசாமி, சட்டக்குழுத் தலைவர் சூரிய பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். தினமும் விருகம்பாக்கம் பகுதியில் குப்பை சேகரிக்கும் அவரிடம், தேவராஜ், தனது மகள் திருமணத்திற்கு வைத்திருந்த நகை காணாமல் போனதாக கூறவே, உடனடியாக குப்பைகளில் தேடி வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications