விடாமல் வெளுத்து வாங்கிய மழை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - இருளில் தவிக்கும் மக்கள்
5 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.
சென்னை: விடிய விடிய கொட்டித்தீர்த்த அதி கனமழையால் சென்னையும் புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தி.நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளில் வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 நாட்களாக இருளில் தவித்து வருகின்றனர்.
சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூறையாடிய மழை
நேற்றிரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மயிலாப்பூரில் உள்ள முத்து தெரு , ஜோசப் காலனியில் மழை வெள்ளம் புகுந்து அங்குள்ள குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால் நிலைமை மோசமானது. ஜோசப் காலனியின் மைதானத்தில் நிரம்பி இருந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாத்திரம், வாளிகளில் தண்ணீரை வாரி இறைத்து வெளியே ஊற்றினாலும் தண்ணீர் வடிந்தபாடில்லை எனவே மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த மந்தைவெளி
சென்னை மயிலாப்பூரில் தேங்கியிருந்த மழை நீரில் நடந்த சென்றவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே பெரிய மரம் ஒன்று விழுந்தது ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். மந்தைவெளி பணிமனையில் இன்று கண்ட்ரோல் ரூம் செக்சன்,நேரக் காப்பாளர் அறை, உதவி கிளை மேலாளர் அரை, முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீடுகளுக்குள் விருந்தாளியான தண்ணீர்
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கன மழையின் காரணமாக தாழ்வான பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளை மட்டுமல்லாது வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
Recommended Video

இருளில் தவிப்பு
கனமழை வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீர் குறைந்தபிறகு மின் விநியோகம் சீராகும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களாகவே இந்த பகுதி
மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

அடாத மழையிலும் சேவை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 8,000க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் களப் பணியாற்றிக்கொண்டும், தயார் நிலையில் உள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அவசர எண்கள்
பருவ மழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044.25819204, 044 25512206, 044-25613207,044-25819208 044-25303870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 944502585, 3445025820, 3445025821 ஆகிய வாட்ஸ்அப் எண்ணிகளிலும் தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற புகார்கள் குறித்தும், தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
கனமழை காரணமாக பூவிருந்தவல்லியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குன்றத்தூர் சாலை, குமணன்சாவடியில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்று வருகின்றன. அதேபோல் குமணன் சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். குன்றத்தூர் - மாங்காடு சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து சென்று கொண்டிருக்கின்றது.

மூழ்கிய நெற்பயிர்கள்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக 92 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காரணமாக மிதமான மழை மற்றும் காற்று வீசுவதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒருவார காலமாகவே கனமழை பெய்து வருகிறது. திருவாமாத்தூர் காரணை பெரும்பாக்கம் ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பாயும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications