சென்னையில் வலம் வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி..நேரு விளையாட்டு அரங்கம் வரை கோலாகலம்
சென்னை: மெரீனா கடற்கரையில் உள்ள மாநிலக்கல்லூரி முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரையிலான செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கியுள்ளது. மாநிலக் கல்லூரி மைதானம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து நேற்று தமிழகம் வந்தடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில், 188 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழா போல் மக்கள் வரவேற்றனர். இந்நிலையில் 40 நாளில் இந்தியாவின் 75 நகரங்களில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தது. ஜோதியை தமிழக அமைச்சர்கள் மெய்யநாதன், தாமு அன்பரசன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
சென்னையில் இன்று ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாடு அரங்கம் வரை ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்திடம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த ஓட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்ல உள்ளதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போக்குவரத்து முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியானது மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்து, காமராஜ் சாலை, இராஜாஜி சாலை, கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ரல் சதுக்கம், ஈவேரா சாலை, இராஜமுத்தையா சாலை வழியாக உள்விளையாட்டு அரங்கத்தினை அடைய உள்ளது. இதனால் இந்த வழித்தடங்களுக்கு பதிலாக மாற்றும் வழித்தடங்களை தேர்வு செய்து பொது மக்கள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications