வரலாறு படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என பலரும் நினைப்பதாகவும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரையில் இதனைக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது;

வரலாறு எதற்கு?
வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்.

நம்பி ஏமாந்து விடக்கூடாது
கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது.

வரலாற்றுத் திரிபு
இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும்.இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது!

பொய் வரலாறு
இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி - மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.

பழமைவாதிகள் அல்ல
தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு!இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது!நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல!

இதோ லிஸ்ட்
அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம். இங்கே மாண்புமிகு அமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
* கீழடி,
* அழகன்குளம்,
* கொற்கை,
* சிவகளை,
* ஆதிச்சநல்லூர்,
* கொடுமணல்,
* மயிலாடும்பாறை,
* கங்கைகொண்ட சோழபுரம் -ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது.

நகரமயமாக்கம்
தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரை
தண் பொருநை என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழு இடங்களில்
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த நம்முடைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏழு இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வுகளைத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம் - பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்கிறோம்.

அகழாய்வு முடிவுகள்
உலகளாவிய நிறுவனங்களின் பரிசீலனைக்கு எங்களது கண்டுபிடிப்புகளை அனுப்பி வைத்துக் கேட்கிறோம். இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன்.கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.

நெல்லையில் காட்சிப்படுத்த
பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றைப் பற்றிய பெருமிதங்கள்!
இத்தகைய வரலாற்று உணர்வை - உண்மையான வரலாற்றை - ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்திய துணைக்கண்டம்
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். தமிழினத்தின் - தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட கட்டடக்கலையினை பறைசாற்றும் வானுயரக் கோவில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் "ஆதன்" என்றும் "குவிரன்" என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications