அடேங்கப்பா! தனியாரையே மிஞ்சும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி.. 4 புதிய கிளைகளை திறந்து வைத்த ஸ்டாலின்!
சென்னை: தொடங்கியது முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகளை தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய வங்கிக் கிளைகளை திறந்து வைத்தார்.

தனியாருக்கே டஃப் கொடுக்கும் கூட்டுறவு வங்கி: வணிக நோக்கத்தில் செயல்படும் பல தனியார் வங்கிகளே திவால் ஆன நம் நாட்டில், தொடங்கப்பட்டது முதலே தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வரும் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. இந்த ஆண்டில் மட்டுமே 114.78 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய கிளைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பின்படி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 118 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி.
தொடர்ந்து லாபம்: சென்னையில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்து வரும் இவ்வங்கி தற்போது 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி, 2022-23ஆம் நிதியாண்டில், 31,484 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு, 114.78 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் முதலீடுகள் ரூ.4,615 கோடியாகவும், வாடிக்கையாளர்களின் வைப்பீடுகள் ரூ.12,486 கோடியாகவும் உள்ளது. இவ்வங்கியில் தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் 20.26 கோடி ரூபாய் ஆகும்.
வணிக வங்கிகளுக்கு நிகராக, வங்கியின் அனைத்துச் சேவைகளும் கணினி வழியில் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், துரிதப் பணப்பரிமாற்றச் சேவைகளான RTGS, NEFT, IMPS, UPI, இணையவழி வங்கிச் சேவை, கைபேசி வழிச்சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் என அனைத்து கணினிவழி வசதிகளையும் இவ்வங்கி கொண்டுள்ளது.

புதிய கிளைகள் இன்று திறப்பு: சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவடைந்ததைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்படாமலிருந்த இவ்வங்கியின் கிளைகள், கூட்டுறவுத் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நான்கு புதிய வங்கிக் கிளைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மருத்துவர் ந.சுப்பையன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ம. அந்தோணிசாமி ஜான் பீட்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications