ஆளுநர் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி... அதிமுக எம்எல்ஏவிற்கு நன்றி சொன்ன முதல்வர்
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.
ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை என்று கூறிய முதல்வர், ஆளுநர் உரை என்பது மக்களின் பாராட்டு உரை என்று கூறி,அரசின் திட்டங்களைப் பாராட்டியதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் புதன்கிழமையன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி உரையாற்றினார். ஆளுநர் உரை நிறைவு பெற்ற பிறகு அலுவல் கூட்டம் நடைபெற்று, சட்டப்பேரவை ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று சட்ட சபை கூடிய உடன் மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா , நடிகர் புனித் ராஜ்குமார், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் பேரவை விதி எண் 110 கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது. எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை 3ஆக பிரிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். சென்னை மாநகர காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு ஆவடி, தாம்பரம் புதிய ஆணையரகங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் ஆளுநர் உரை எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை என்று கூறிய முதல்வர், ஆளுநர் உரை என்பது மக்களின் பாராட்டு உரை என்று கூறி,அரசின் திட்டங்களைப் பாராட்டியதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறிய அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார். பயிர் பாதிப்புக்கு ரூ.132.12 கோடி நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் கூறினார். திண்டுக்கல்,தேனி, திருவள்ளூரில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications