சீனில் இல்லாத சிஎம்! வெள்ளம் வந்தாலும்.. வெளியே வரலையே! தூங்கி எழுந்து காலையில் வந்த அமைச்சர்கள்
சென்னை: இது எல்-நினோ ஆண்டு, மழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டதை போலவே, நேற்று சென்னையை மழை மொத்தமாக நனைத்திருந்தது. பல இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றபோதும்.. அதை ஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் வரவில்லை. காலையில் வெள்ளம் வடிந்த பின்னர், அமைச்சர்கள் வந்து ஆய்வை நடத்துகின்றனர் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒவ்வொரு வருஷமும் இந்த மழைக்காலத்தை கடப்பது என்பதுதான் சென்னைக்கு சவாலான விஷயம். அந்த வகையில் நேற்று பெய்த மழை, சென்னையை மீண்டும் ஒருமுறை சோதித்து பார்த்திருந்தது.

முன்னெச்சரிக்கையாகவே சொல்லப்பட்ட விஷயம்
இந்த மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் முன்கூட்டியே எச்சரித்திருந்தனர். சென்னைக்கு மேலே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிக்குது.. அது பயங்கர மழையை கொண்டுவரப்போகுது என வெதர்மேன் உள்ளிட்டோர் கணித்து கூறியிருந்தனர். அவர்கள் கணித்ததை போலவே மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக பாரிமுனை பகுதியில் 30 செ.மீக்கும் கூடுதலாக மழை பதிவாகியிருந்தது.
சென்னையை மொத்தமாக நனைத்த மழை
திருவொற்றியூர் ஹைரோடு, ராயபுரத்தில் முக்கியமான பகுதிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சுரங்கப்பாதைகள் என பல இடங்களில் இரவு மழைநீர் தேங்கியிருந்தது. ஆனால் இந்த பிரச்சனைகளை பக்கத்தில் இருந்து ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள், எம்எல்ஏக்கள் யாரும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போகவில்லை. இன்று காலைதான் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் களத்திற்கு போக வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு எதையும் நடத்தவில்லை, நிவாரணப் பணிகளை பார்வையிடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
தூங்கி எழுந்து வந்த அமைச்சர்கள்
அமைச்சர்களை பொறுத்தவரை ஆதவ் அர்ஜுனா இன்று காலையில்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் தாமதமானாலும், மாநகராட்சி அதிகாரிகள் நைட் முழுக்க களத்தில் இருந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், மாநகராட்சி ஆணையர் சமீரன் இரவு முழுவதும் களத்தில் இருந்து சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியிருந்த நீரை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
கடந்த ஆட்சியில் செய்த பணிகள்
அதிகாரிகளின் முயற்சியால்.. இரவு இருந்த வெள்ளம் காலையில் சுத்தமாக வடிந்துவிட்டது. அதேபோல முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்புகள்தான் வெள்ளம் முழுமையாக வடிய காரணம். குறிப்பாக சாலைகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வடிகால்கள், குப்பைகளை தடுத்து நீரை மட்டும் வேகமாக கால்வாய்களில் செல்ல உதவியது. எனவே முக்கியமான சாலைகளில் வெள்ளம் நீண்ட நேரத்திற்கு தேங்காமல் இருந்தது.
அதிகாரிகள் இவ்வளவு வேலையை செய்தபோது, ஆட்சியாளர்களும் களத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருக்கிறார்கள். போதுமான முன்னெச்சரிக்கை இருந்தும் வடிகால் பணிகளை ஆட்சியாளர்கள் சரியாக செய்யவில்லை என்றும் விமர்சித்திருக்கின்றனர்.
மராமத்து பணிகள் நடக்கவில்லை.
வெள்ளம் வரும்போது அதை கடலுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகள் செய்யும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்திற்கு முன்னரே ஆற்றை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, கருவேல மரம் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த ஆண்டு தவெக அரசு இந்த மராமத்து பணிகளை செய்யவில்லை என்று சூழலியலாளர்கள் விமர்சித்திருக்கின்றனர். இதனால்தான் திருவல்லிக்கேணி மற்றும் கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இனிவரும் காலங்களிலாவது வெள்ள பாதிப்புகளை தடுக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்களும், சூழலியலாளர்களும் வலியுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications
