அடடா.. சீட்டுக்கு வேட்டா? கேஎஸ் அழகிரி பேச்சால் ‘கிலி’யில் காங்கிரஸ் சீனியர்கள், சிட்டிங் எம்பிக்கள்
சென்னை: காங்கிரஸ் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ள தகவல், சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்கும், சிட்டிங் எம்.பிக்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மேலிடத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த முறை போட்டியிட்ட சீட்களை விட கூடுதலாகவோ, அல்லது கடந்த முறை போட்டியிட்டு வென்ற தொகுதிகளையோ உறுதி செய்வதில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரஸும், இந்த முறை இரட்டை இலக்கத்தில் சீட் வாங்கி விட வேண்டும் என முயன்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சீட்: திமுக கூட்டணியில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. இதில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியைத் தழுவினார். மற்ற 8 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், மீண்டும் 9 தொகுதிகளையாவது பெற்று விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பிக்கள் மட்டுமல்லாது முன்னணி தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் என பலரும் சீட் கேட்டு டெல்லி வரை துண்டு போட்டு வருகின்றனராம். மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தனது மகன் கார்த்திக்கிற்காக சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன. சீனியர் தலைகள் பலரும், மேலிடத்திற்கும், கேஎஸ் அழகிரிக்கும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
புதியவர்களுக்கு வாய்ப்பு: இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ள தகவல் சீனியர் தலைவர்கள் பலருக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வரும் மக்களவைத் தேர்தலில் புதியவர்களுக்கு அதிகளவு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதுதான் மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாம்.
திருவள்ளூர் எம்.பியான ஜெயக்குமார், ஏற்கனவே நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக இருந்தவர். கிருஷ்ணகிரி எம்.பியான செல்லக்குமார், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பலமுறை போட்டியிட்டவர். ஆரணி எம்.பியான விஷ்ணு பிரசாத், 2006-2011 வரை எம்.எல்.ஏவாக இருந்தவர்.
காங்கிரஸ் எம்.பிக்கள் மீண்டும் போட்டியிட முயற்சி: கரூர் எம்.பி ஜோதிமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2016லும் மீண்டும் சீட் பெற தீவிரமாக முயன்றபோது, திமுகவே அங்கு போட்டியிட்டதால், அதிருப்தி அடைந்தார். பின்னர், 2019ல் எம்.பி சீட் கிடைத்து வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் சீட் பெற்றுவிட தீவிரமாக முயன்று வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் திருச்சி தொகுதி எம்.பியாக உள்ளார். சட்டசபை துணை சபாநாயகர், அமைச்சர் என பல்வேறு பகுதிகளை வகித்தவர் திருநாவுக்கரசர். சிறிது காலம் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். 1977 முதல் பல முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தனிக்கட்சி தொடங்கியவர். இவரது மகன் ராமச்சந்திரன் தற்போது அறந்தாங்கி எம்.எல்.ஏவாக உள்ளார்.
கார்த்தி சிதம்பரம்: சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு முதல் முறை எம்.பி ஆனவர். ப.சிதம்பரம் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். இந்த முறை சிவகங்கை தொகுதியை காங்கிரஸுக்கு வழங்கக்கூடாது என திமுக தரப்பில் கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஆனால், ப.சிதம்பரத்தின் செல்வாக்கில் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசமே செல்லும் என்கிறார்கள்.
விருதுநகர் எம்.பியான மாணிக்கம் தாகூர், 2009ல் அங்கு போட்டியிட்ட வைகோவை வென்றவர். 2014ல் மீண்டும் அங்கு போட்டியிட்டபோது வைகோ, மாணிக்கம் தாகூர் இருவருமே தோல்வியைச் சந்தித்தனர். 2019ல் மீண்டும் போட்டியிட்டு எம்.பி ஆனார் மாணிக்கம் தாகூர். மேலிடத்துடன் அதிக நெருக்கம் கொண்ட மாணிக்கம் தாகூர், மீண்டும் விருதுநகரில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார்.
சீனியர்கள் அதிர்ச்சி: கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த். தனது அப்பா வசந்தகுமார் மறைவால் நடந்த இடைத்தேர்தலில் வென்று எம்.பியான விஜய் வசந்த், கன்னியாகுமரி தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. இவ்வாறு காங்கிரஸ் வென்ற 8 தொகுதிகளிலும் சிட்டிங் எம்.பிக்கள், மீண்டும் போட்டியிட முயன்று வரும் நிலையில் தான் புதியவர்களுக்கு சீட் கொடுக்கப்படும் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கேஎஸ் அழகிரி.
கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மாநில தலைவரான பிறகு நடந்த அத்தனை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. எனவே, மேலிடத்திலும் அவர் மீது நல்ல அபிப்ராயம் உள்ள நிலையில், அவர் பேச்சு எடுபடும். இந்நிலையில், சீனியர்கள், அழகிரியின் பேச்சால் அதிர்ந்து, டெல்லியில், பிரஷர் போட தொடங்கியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications