ஆசையாய் பச்சை துண்டை கொடுத்த அமைச்சர்.. முகத்தை திருப்பிக் கொண்ட காங்., கடுகடு முகத்துடன் பெருந்தகை!
சென்னை: காங்கிரஸ் திமுக கூட்டணி சமூகமாக சென்று கொண்டிருக்கிறது என இரு தரப்பும் சொன்னாலும் உள்ளுக்குள் உரசல் இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. நேற்றைய பட்ஜெட் கூட்டத் தொடரை காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரான ராஜேஷ் குமார் புறக்கணித்திருக்கிறார். வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கிய பச்சை துண்டுகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாங்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அமைச்சர் உடன் சகஜமாக பேசி சிரிக்கும் செல்வப் பெருந்தகையும் கடுகடு முகத்துடன் அமர்ந்திருந்தார் என்கின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் கூட்டணி அரசியலில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கிய பச்சை துண்டுகளை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அணியாதது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பேசப்படுகிறது. இதே சமயம், திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த துண்டுகளை அணிந்தனர்.
சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட் உரையை வாசித்தார்.

திமுக காங்கிரஸ்
இந்த நிகழ்ச்சியின் போது, அவர் வழங்கிய பச்சை துண்டுகளை பலரும் தோளில் அணிந்தனர். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்த துண்டுகளை ஏற்காமல் இருந்தனர். இந்த சம்பவம் தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமல்லாமல், கூட்டணிக்குள் நிலவும் அதிருப்தியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்று தெரிவித்த பின்னர், காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
கூட்டணி உரசல்
கூட்டணியில் இட ஒதுக்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தரவு ஆய்வு பிரிவு தயாரித்த அறிக்கைகள் டெல்லியில் தேசியத் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
அந்த அறிக்கைகளில், கட்சி தனியாக அல்லது புதிய கூட்டணியுடன் போட்டியிட்டால் வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் ராகுல் காந்தி முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்கால தேர்தல் திட்டம், கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி தேர்வு போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த சந்திப்பில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
செல்வப் பெருந்தகை
இதன் வெளிப்பாடாக சட்டசபை நிகழ்வுகளின் போது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் சபைக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் சமீப காலமாக கூட்டணி குறித்து விமர்சனக் கருத்துகளை வெளிப்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். வழக்கமாக அமைச்சர்களுடன் உரையாடும் அவர், நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது பாமக தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பச்சை துண்டுகளை அணிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திமுக கூட்டணியில் சில மாற்றங்கள் நிகழலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications