தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி - முதல்வர் ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 50வது பிரிட்ஜ் 2023 கருத்தரங்கினை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்
சென்னை: ஆசியாவிலேயே பெரிய டைடல் பார்க்கை உருவாக்கி பெருமை சேர்த்தது கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை. தகவல் தொழில் நுட்பத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வதந்தி பரப்பி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழிநுட்பவியல் சார்பில் 50வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்கள் ஆயத்தம் செய்ய ஒப்பந்தமும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருத்தரங்கில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரிட்ஜ் கருத்தரங்கம் 2023
பிரிட்ஜ் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தொழில்நுட்பம் உலகை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதலில் வடிவமைத்தது திமுக அரசு என்று முதல்வர் கூறியுள்ளார். 1997ஆம் ஆண்டு முதன்முதலாக தகவல் தொழில்நுட்ப கொள்கையை கலைஞர் வகுத்து கொடுத்தார்.

தகவல் தொழில் நுட்பம்
1998ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்திற்கு என தனி துறையை உருவாக்கியது கருணாநிதிதான். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னேறிருப்பதற்கு காரணம் கலைஞர். தகவல் தொழில் நுட்பத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. உலகத்தில் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு மற்றொரு மூலைக்கு உடனே கிடைத்து விடுகிறது. தனி மனித பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றியமையாதது.

கருணாநிதி அரசு
தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் கலைஞர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஐ.டி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் வரக் காரணம் கலைஞர். மின் ஆளுமை திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.

டிஜிட்டல் மயமாக்க முயற்சி
தகவல் தொழில்நுட்ப அகாடமி திமுக ஆட்சியில்தான் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பெரிய பங்காற்றி வருகிறார். அரசு துறைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை பலி வாங்குகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வதந்தி பரப்பும் அரசியல் கட்சியினர்
தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வதந்திகளை சில அரசியல் கட்சியினர் பரப்புகிறார்கள். இதன் மூலம் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் தகவல் தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இளைய தலைமுறைகள் தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications