கூட்டுறவு வங்கி.. விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன்.. வட்டி எவ்வளவு? யாரெல்லாம் பெறலாம்?
சென்னை: விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அவதிப்படுவதைத் தடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு புதிய மற்றும் மிக முக்கியமான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது... விவசாயிகளின் பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு தற்போது இந்த புதிய சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது... அது என்ன தெரியுமா?
விவசாயிகளுக்கு விவசாயம் செய்யும் போது பல்வேறு தேவைகளுக்காக திடீரென பணம் தேவைப்படும். குறிப்பாக வயலில் மோட்டார் பம்ப் அமைப்பது, நிலத்தை சீரமைப்பது, அறுவடைக்கு தேவையான கருவிகளை வாங்குவது போன்ற பணிகளுக்கு அதிக செலவு ஏற்படும்.

இதற்காக தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை சில விவசாயிகளுக்கு உள்ளது. இதை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிய கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களுடைய வேளாண் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்தக் கடனை மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
கூட்டுறவு வங்கிகளில் கடன்
அதாவது, விவசாய நிலத்தில் மோட்டார் பம்ப் அமைக்க வேண்டும் என்றாலும், நிலத்தை சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்றாலும் இந்தக் கடனைப் பயன்படுத்தலாம். அதேபோல், அறுவடை பணிகளுக்கு தேவையான கருவிகளை வாங்கவும் கடன் பெற முடியும்.
மேலும் குறைந்த திறன் கொண்ட சோலார் எனப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கும் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த கடனுக்கு 9 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான தொகையை திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளலாம்.
பயிர்க்கடன் 7 சதவீத வட்டி
ஏற்கனவே கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன் 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை விவசாயிகள் உரிய காலத்துக்குள் திருப்பி செலுத்தினால், அதற்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கடன் திட்டத்தின் மூலம், விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும். தேவையான நேரத்தில் கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், நடப்பு ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.5000 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆவணங்கள் அவசியம்
அதனால் வேளாண் பணிகளுக்காக கடன் தேவைப்படும் விவசாயிகள், தங்களுடைய பகுதிக்கு அருகில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி, இந்தக் கடனைப் பெறுவதற்கான தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விவசாயத்தில் தண்ணீர் வசதி, மின் செலவு குறைப்பு, நிலத்தின் பயன்பாடு மற்றும் அறுவடைப் பணிகளின் வசதி போன்றவற்றில் இதன்மூலம் உதவியும் கிடைக்கலாம். அதனால் விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தக் கடன் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..!!


Click it and Unblock the Notifications
