முதல்வரிடம் நலம் விசாரித்த பிரதமர்.. செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு மோடியை அழைத்த ஸ்டாலின்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் தொலை பேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.
சென்னை: கொரோனா தொற்று உறுதியானதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அப்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா அறிகுறி..முதல்வர் மு.க ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி - சிடி ஸ்கேன் பரிசோதனை'

மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதிப்புக் காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை குறித்து கண்காணித்து, பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நலம் விசாரித்த மோடி
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க ஸ்டாலினிடம் நலம் விசாரித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. வரும் 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மோடி சென்னை வருகை
செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளனர்.

டெல்லி பயணம் கேன்சல்
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் அடுத்தவாரம் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் பிரதமர் மோடி.

மோடிக்கு ஸ்டாலின் அழைப்பு
நேரில் சென்று அழைப்பு விடுக்க முடியாத காரணத்தால் தொலைபேசி மூலம் பேசிய பிரதமரை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அமைச்சர்கள் நேரில் வந்து அழைப்பு விடுப்பார்கள் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications